மேற்கு ஆப்பிரிக்காவின் கானா-வில் உள்ள ஒரு கிராமத்தில் கர்ப்பிணி பெண்கள் குழந்தைப் பெற்றெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது!
மேற்கு ஆப்பிரிக்காவில் மாம்ப்பி டோவ் இனத்தை சேர்ந்த மக்கள் வசிக்கும் கிராமம் ஒன்றில், கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் பிறப்புகளும், இறப்புகளும் கடவுளை புண்படுத்தும் செயலுக்கு சமம் என உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.
இதன் காரணமாக கிராமத்தில் உள்ள கர்ப்பிணிகள் தங்கள் மகப்பேறு காலத்தின் போது அடுத்த கிராமத்திற்கு சென்று குழந்தை பெற்றெடுத்து வருகின்றனர். சிலர் கடைசி நிமிடங்களில் விரைந்து சென்று பிரசவம் பார்க்கும் அவல நிலைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த பழக்கத்தினை குறித்து உள்ளூர் பெண்மனி ஒருவர் தெரிவிக்கையில்., "எங்கள் கிராம மண்ணில் ரத்தம் வெளிப்படுவது கடவுளை புண்படுத்தும் செயலுக்கு சமானமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக எனது முதல் குழந்தை பிரசவத்திற்கு அருகில் இருந்த கிராமத்திற்கு சென்றேன், இரண்டாவது குழந்தைக்கும் அடுத்த கிராமத்திற்கு சென்றேன். தற்போது நான் 9 மாத கர்ப்பிணியாக உள்ளேன், எனது மூன்றாவது குழந்தையினை அடுத்த ஊரில் இருக்கும் நர்சிங் ஹொமில் பெற்றெடுப்பேன்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிராம தலைவர் தெரிவிக்கையில் "எங்கள் கிராமத்தில் கடவுள் தான் முதல் நிலை, பிரசவங்கள் மட்டும் அல்ல, மிருகங்களை கொல்லுதல், இறந்தவர்களை புதைத்தல் போன்றவை எங்கள் கிராமத்தில் அனுதிக்கப்படுவதில்லை" என தெரிவித்துள்ளார்.
பல காலமாக இந்த வழக்கம் நடைமுறையில் இருந்தாலும், சமீப காலமாக இந்த வழக்கத்தினை பின்பற்ற சில பெண்கள் மறுத்து வருகின்றனர். தங்கள் சமுதாய மக்களிடன் காணப்படும் இந்த வழக்கத்தினை பல கிராமத்தினர் கைவிட்ட போதிலும் தங்களது கிராமத்தில் இன்றும் கடைப்பிடிக்கப் பட்டு வருவது வருத்தமளிக்கிறது என உள்ளூர் வாசிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.