யார் படங்களை எடுக்கவேண்டும் என கூற யாருக்கும் உரிமையில்லை - விஷாலுக்கு தயாரிப்பாளர் பதிலடி!

சின்ன படங்கள் எடுக்க நினைப்போர் வரவேண்டாம் என விஷால் கூறியது சரியா..? ‘எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் அனல் பறந்த விவாதம்.  

Written by - RK Spark | Last Updated : Sep 26, 2023, 06:39 AM IST
  • யார் படங்களை எடுக்கவேண்டும் என கூற யாருக்கும் உரிமையில்லை.
  • விஷால் சொன்னது கூட ஒருவகையில் சனாதானம் தான்.
  • எனக்கு என்டே கிடையாது தயாரிப்பாளர் கார்த்தி பதிலடி.
யார் படங்களை எடுக்கவேண்டும் என கூற யாருக்கும் உரிமையில்லை - விஷாலுக்கு தயாரிப்பாளர் பதிலடி! title=

Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தளபதி ரத்னம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்திரமுகி 2, யாத்திசை உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் ஓம் பிரகாஷ் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். படத்தொகுப்பை வேல்முகனும் கலை வடிவமைப்பை சூர்யாவும் கவனித்துள்ளார். 

அக்டோபர் 6 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆக்சன் ரியாக்சன் சார்பில் ஜெனிஷ் இந்தப்படத்தை வெளியிடுகிறார். இதனை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் என யாருமே சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்காமல் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டனர்.  தயாரிப்பாளர் கார்த்திக் பேசும்போது, “அடிப்படையில் வழக்கறிஞர் என்றாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தில் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் பயிற்சி எடுத்தேன். கடந்த ஏழு வருட தவமாக தற்போது இந்த படத்தை தயாரித்துள்ளேன். இந்த ஏழு வருடங்களில் ஒவ்வொரு முறையும் இந்த படத்தை துவங்க முயற்சிக்கும்போது சில தடங்கல்கள் ஏற்பட்டு முயற்சி தள்ளிப்போனது. ஆனாலும் ‘எனக்கு என்டே கிடையாது’ என்கிற எங்கள் படத்தின் டைட்டிலை எனக்கு நானே சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டேன்.

enk

மேலும் படிக்க | போட்டோஷூட் நடத்திய நடிகர் விஷால் - லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

விக்ரம் ரமேஷ் என்னை சந்தித்து சொன்ன கதை தனித்துவமாக இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்பாக சில விஷயங்களில் தீர்மானமாக இருந்தேன். படப்பிடிப்பில் யாரும் யாரையும் திட்டக்கூடாது. கோபத்தைக் காட்டக் கூடாது. படப்பிடிப்பில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அன்றைய தின ஊதியத்தை அவர்கள் கேட்காமலேயே தேடிச்சென்று கொடுத்து விட வேண்டும்.. எல்லோருக்கும் சரிசமமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தென்.. படப்பிடிப்பு நடந்த 35 நாட்களிலும் அதை இடைவிடாமல் கடைபிடித்து முதல் படத்திலேயே இதை சாதித்தும் விட்டேன். இந்த படத்தில் மூன்று பேருக்கு இடையே ஏற்படும் ஒரு சிறிய போராட்டம் ஒன்று இருக்கிறது. இதற்கு ஸ்டண்ட் மாஸ்டரை வைத்து படமாக்கினால் நன்றாக இருக்கும் என்பதால் ஓம் பிரகாஷை அழைத்தோம். அவர் அதை ஒரு பிரமாதமான சண்டைக் காட்சியாகவே அமைத்துக் கொடுத்தார். யாத்திசை போன்ற படத்தில் 300 பேருக்கு மேல் வைத்து சண்டை காட்சிகளை உருவாக்கியவர் வெறும் மூன்று பேருக்கான சண்டைக் காட்சியையும் அழகாக வடிவமைத்து கொடுத்தார்.  சமீபத்தில் நடிகர் விஷால் பேசும்போது மூன்று கோடி, நான்கு கோடி வைத்துக்கொண்டு சின்ன படங்களை தயாரிக்கிறோம் என யாரும் வர வேண்டாம் என கூறியிருந்தார். இதுவே ஒரு விதமான சனாதானம் தான்.. இப்படி சொல்ல யாருக்குமே உரிமை இல்லை” என்று கூறினார்.  

தயாரிப்பாளர் கார்த்திக்கின் வழிகாட்டியாக அவருக்கு பக்கபலமாக துணை நிற்கும் சக்தி என்பவர் பேசும்போது, “எனக்குள் இருக்கும் இலக்கிய ஆர்வம் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. விக்ரம் ரமேஷ் முதல் பட இயக்குநர் மாதிரியே இல்லை.. தயாரிப்பாளர் கார்த்திக்கை பொறுத்தவரை, தான் இருக்கும் இடங்களில் யாரும் மோசமான வார்த்தைகள் பேசுவதை விரும்ப மாட்டார். யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டார். முக்கியமாக தனிநபராக இல்லாமல் எல்லோரும் கூட்டாக சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என விரும்புபவர். இந்த படத்தின் இசையமைப்பாளர் கலாசரணின் திறமையை பார்க்கும்போது இத்தனை நாளாக இவர் எப்படி வெளியே தெரியாமல் இருந்தார் என்கிற ஆச்சர்யம் ஏற்பட்டது” என்று கூறினார்.

இப்படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்றுள்ள விநியோகஸ்தார் ஜெனிஷ் பேசும்போது, “சமீபத்திய நிகழ்வில் நடிகர் விஷால் சின்ன படங்களை எடுப்பவர்கள் தயவு செய்து சினிமாவுக்கு வர வேண்டாம் அதற்கு பதிலாக அந்த காசில் சொத்து வாங்கி போடுங்கள் என்று கூறியதை அவர் சொன்ன ஒரு அறிவுரையாக தான் நான் பார்க்கிறேன். அவர் ஒரு தயாரிப்பாளராக தனது கடந்தகால அனுபவத்திலிருந்து அப்படி கூறியுள்ளார். அவர் சொன்னது போல இன்று சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதிலும் ஓடிடி தளங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதிலும் நிறைய சிரமங்கள் இருக்கிறது. லட்சங்களில் எடுக்கப்பட்ட படங்களை விநியோகித்து கூட நல்ல லாபம் பார்த்தேன். அதேசமயம் சமீபத்தில் ஒரு ஐந்து கோடி பட்ஜெட்தில் எடுக்கப்பட்டு வெளியான படம் வெறும் பத்து லட்சம் தான் வசூலித்தது. டாடா, குட் நைட் போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வசூல் செய்தன என்பதையும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

நடிகர் சிவகுமார் ராஜு பேசும்போது, “இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தபோது எனக்கே முதலில் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால் என்னை ஊக்கப்படுத்தி உற்சாகம் கொடுத்து நடிக்க வைத்தனர். முதன்முறையாக சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. ரிகர்சல் பண்ணும்போது தான் சினிமா என்பது விளையாட்டு கிடையாது என்பதை உணர்ந்தேன்” என்று கூறினார். 

ஒரு படத்துக்கு தேவை நல்ல கதை.. ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனம்.. இவை இரண்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். இந்த படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் வெளியே வரும்போது படம் நல்லா இருக்கு என்று மட்டுமே சொல்வார்கள்.  இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகி ஏன் கலந்து கொள்ளவில்லை என்றால், அவரை எங்களால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இந்தியன் 2, கேப்டன் மில்லர் என பெரிய படங்களில் அவர் பிசியாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.. ஒருவேளை இனி பெரிய படங்களில் தான் நடிப்பார் போல தெரிகிறது.  இந்த படத்தில் நடித்துள்ள சேகர் என்கிற கதாபாத்திரம் ஒரே நாளில் பலவிதமான பிரச்சனைகள சந்திக்கும்... அவரது வாழ்க்கையும் இந்த படத்தின் கதையும் முடிந்து விடும் என நினைக்கும் நேரத்தில் மீண்டும் புதிதாக இன்னொரு விஷயம் தொடரும். அதனால் தான் எனக்கு எண்டு கார்டே இல்லை என்கிற டைட்டிலை இந்த படத்திற்கு வைத்தோம்: என்று கூறினார்.

மேலும் படிக்க | ஷாருக்கான் நடிக்க இருந்த கதையில் சிவகார்த்திகேயன்? இயக்குனர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News