தமிழ் திரை உலகின் நீண்டகால வரலாற்றில், பல உன்னத நடிகர்களை நாம் கண்டுள்ளோம். தங்கள் நடிப்பாலும், தாங்கள் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களாலும், மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றவர்கள் பலர்.
புது நெல்லு புது நாத்து, சீவலப்பேரி பாண்டி, கிழக்குச் சீமையிலே, கரிசக்காட்டுப் பூவே என பல படங்களில் நடித்து, தன் நடிப்புத் திறமையால் பலரது நெஞ்சங்களில் நீங்காத இடம் கொண்டுள்ளவர் நடிகர் நெப்போலியன் (Napoleon). அவர் ஏற்று நடித்த அனைத்து கதாப்பாத்திரங்களும் மனதில் பதியும் வண்ணம் அமைந்துள்ளன என்பதில் ஐயமில்லை.
தற்போது நெபோலியனின் முதல் ஹாலிவுட் (Hollywood) படமான ‘டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நெயின் ரோக்’ டிஜிட்டல் தளத்தில் விரைவில் வெளிவரவுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, பல ஹாலிவுட் படங்கள் டிஜிட்டல் தளங்களில்தான் (Digital Platform) வெளியாகி வருகின்றன. அவ்வகையில், இப்படமும் விரைவில் அமேசான் ப்ரைமில் இந்திய ரசிகர்களுக்குக் காணக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ரைம் த்ரில்லரான இப்படத்தை சேம் லோகன் கலேகி இயக்கியுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து ஜூம் அழைப்பு மூலம் பேசிய நெப்போலியன், உலக மக்கள் அனைவரும் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும் இவ்வேளையில், தனது படம் வெளி வர இருப்பது தனக்கு ஒரு ஆறுதலான விஷயமாக இருப்பதாகக் கூறினார். கொரோனா தொற்று காரணமாக திரைப்படங்கள் திரை அரங்குகளை எட்ட முடியாத நிலை உள்ள இன்றைய சூழலில், OTT தளங்களில் படங்கள் வெளிவருவது ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருப்பதாக நெப்போலியன் கூறினார்.
ALSO READ: அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அசத்தும் இந்திய வம்சாவளிப் பெண்!!
இப்படத்தில் நெப்போலியன் ஒரு அருங்காட்சியக கண்காணிப்பாளராக பணிபுரிகிறார். மேலும் இப்படத்தில் ஜெசி ஜென்சன், நாதன் கேன் மேதர்ஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘கிறிஸ்துமஸ் கூபன்’ (Christmas Coupun) மற்றும் ‘ட்ராப் சிடி’ (Trap city) ஆகிய இரு ஹாலுவுட் படங்களிலும் நெப்போலியன் நடித்துள்ளார். ’ஒரு காலத்தில், கோலிவுட்டின் (Kollywood) ஒவ்வொரு இயக்குனரும் கதை சொல்ல வரும்போது, ‘ஓபன் செஞ்ச உடனே, ஒரு தொலைதூர கிராமத்த காட்டறோம் சார்’ என்ற வரியுடன் துவக்குவார்கள். அதன் பிறகு அதில் என் கதாபாத்திரம் என்ன என்பதை விளக்குவார்கள். ஆனால், அப்போது நான் நகர்ப்புற சொகுசு கதாபாத்திரங்களில் நடிக்க ஏங்கினேன். இப்போது அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில்தான் நான் நடிக்கிறேன்’ என்றார் நெப்போலியன்.
வரவிருக்கும் அவரது மற்ற படமான கிறிஸ்துமஸ் கூபனில் அவர் ஒரு விளையாட்டு முகவராகவும், டிராப் சிடியில் ஒரு மெய்க்காப்பாளராகவும் அவர் நடிக்கிறார்.
ALSO READ: தமிழகத்தில் பல வழிகாட்டுதல்களுடன் திறக்கப்படுகின்றன வழிபாட்டுத் தலங்கள்
இந்த மூன்று படங்களையும் தயாரிக்கும் கைபா ஃபிலிம்சிலும் நெப்போலியனின் பங்கு உள்ளது. முதலில் இப்படங்களை திரை அரங்கங்களில் வெளியிடுவதற்கான முடிவே இருந்ததாகவும், பின்னர், கொரோனா (Corona) தொற்று காரணமாக, நேரத்தை வீணாக்காமல், டிஜிட்டல் தளத்தில் படங்களை வெளியிட முடிவெடுத்ததாகவும் நெப்போலியன் கூறினார்.