விக்ரம் படம் எப்படி?: நடிப்பு ராட்சசன்களின் வேற லெவல் வேட்டை

Vikram Movie Review Analysis : 36 வருஷங்களுக்கு கமல் - ராஜசேகர் கூட்டணியில் உருவான விக்ரம் படத்தோட தொடர்ச்சியா இல்லை கைதி படத்தோட பார்ட் 2வான்னு நிறைய தகவல்கள் உலாவிக்கிட்டிருந்த தருணத்துல படமும் இப்போ ரிலீஸ் ஆகிடுச்சு.   

Written by - K.Nagappan | Last Updated : Jun 3, 2022, 04:54 PM IST
  • விக்ரம் திரைப்படம் ஓர் அலசல்.!
  • கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதை அலசல்
  • நடிப்பு அசுரர்களின் அசல் வேட்டை
விக்ரம் படம் எப்படி?: நடிப்பு ராட்சசன்களின் வேற லெவல் வேட்டை  title=

ஒன்லைன் என்னன்னு பார்த்தா.... பல வெர்ஷன்கள், பெர்சப்ஷன்கள் இருக்கு. ஒரு வரியில இதை அடக்க முடியுமா, சொல்ல முடியுமான்னு தெரியலை.

போதைப் பொருள் கடத்தி விற்பனை செய்யும் மாஃபியா கும்பலைத் தேடிப் போய் தண்டிக்கும் உளவுத்துறை ஏஜெண்ட்டின் கதைன்னு சொல்லலாம். இன்ஸ்பெக்டராக இருந்த மகன் கொல்லப்பட்ட நிலையில், தன் குடும்பத்தைக் காப்பாற்றத் துடிக்கும் தந்தையின் போராட்டம்னு சொல்லலாம். கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், ரத்தத்துக்கு ரத்தம்னு பழிவாங்கும் படமான்னு பார்த்தா போதைப் பொருள் இல்லாத தமிழகம்னு கனவு காணுற, அப்படி ஒரு சுத்தமான உலகத்தைத் தன் பேரனுக்கும், அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொடுக்கணும்னு நினைக்கிற தாத்தாவின் நியாயமான கோபம்னு கூட சொல்லலாம். 

ஏன் இவ்ளோ பீடிகைன்னு கேட்குறீங்களா? அவ்ளோ விஷயங்கள் படத்துல இருக்கு. ஜஸ்ட் ஒரு மேலோட்டமான கதையைச் சொல்றேன். 

மேலும் படிக்க | Vikram: நள்ளிரவில் களைகட்டிய தியேட்டர்கள் - ஆடிப்பாடி மகிழ்ந்த ரசிகர்கள்

2 கண்டெய்னர்ல 2 லட்சம் கோடி மதிப்புள்ள இல்லீகல் போதைப் பொருளை இன்ஸ்பெக்டர் பிரபஞ்சன் பிடிச்சு பறிமுதல் செய்றாரு. அதைப் பத்திரமா ஒரு இடத்துல வெச்சிட்டு தன்னோட உயர் அதிகாரிக்குத் தகவல் சொல்றாரு. அதுக்குள்ள அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், மாஸ்க் மேன்ஸ்னு கூடச் சொல்லலாம். அவங்க இன்ஸ்பெக்டர் பிரபஞ்சனைக் கொன்னுடறாங்க. அடுத்தடுத்து சில பேர் இப்படி கொலை செய்யப்படுறாங்க. போலீஸ் டிப்பார்ட்மென்ட், அரசு அதிகாரிகள் மட்டத்துல மட்டும் இப்படி தொடர் கொலைகள் ஏன் நடக்குதுன்னு அதிர்ச்சி ஆகுறாங்க. இதைக் கண்டுபிடிக்கிற பொறுப்பு சீக்ரெட் ஏஜெண்ட் அமர்கிட்ட கொடுக்கப்படுது. 

vijaysethupathi

போதைப் பொருள் எங்கேன்னு வில்லன் குரூப் தேட, மாஸ்க் மேன்ஸ் யாருன்னு அமர் தேடத் திரை தீப்பிடிக்குது. போலீஸ் டிப்பார்ட்மென்ட்டுக்கும் சீரியல் கில்லருக்குமான லிங்க் என்ன, ஏன் இப்படி கொலைகள் நடக்குதுன்னு ஒவ்வொரு விஷயமா அமர் துப்பறியறாரு. அப்போ பிரபஞ்சனோட அப்பா கர்ணன் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டதா தெரியவருது. கர்ணன் மீதான விசாரணை சுவாரஸ்யத்தையும், குழப்பத்தையும் கொடுக்குது. ஒவ்வொரு விஷயமா அமர் கண்டுபிடிக்கும்போது அதன் திசையே வேற மாதிரி போய்டுது. இந்தச் சூழல்ல இந்தக் கொலைகளுக்கு யார் காரணம்னு கண்டுபிடிச்சுட்டு, போலீஸ்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டு அமர் ஒதுங்கிடுறார். அப்போதான் ஆரம்பிக்குது அடுத்தடுத்த பிரச்சினைகள். 

உண்மையில் நடந்தது என்ன, அந்த போதைப்பொருள் கண்டெய்னர் யாருக்குச் சொந்தமானது, அந்த நெட்வொர்க் எப்படி இயங்குது, பிரபஞ்சன் கொலைக்கான பின்னணி என்ன, தொடர் கொலைகளின் நதிமூலம் ரிஷி மூலம் என்ன, கர்ணன் என்ன ஆனார் போன்ற கேள்விகளுக்கு ரத்தம் தெறிக்க தெறிக்க பதில் சொல்லுது திரைக்கதை. 

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜின் சம்பவம்! விக்ரம் திரைவிமர்சனம்!

லோகேஷ் கனகராஜ் கமலோட தீவிரமான, வெறித்தனமான ஃபேன்ங்கிறதை ஒவ்வொரு ஃபிரேம்லயும் நிரூபிச்சிருக்கார். அதுக்காக இது கமல் படம் மட்டும் இல்லை, என்னோட டச்சும் மிஸ் பண்ணாம பார்த்துப்பேன்னு சத்தியம் பண்ணாத குறையா இறங்கி அடிச்சிருக்கார். கமல் படமா, லோகேஷ் கனகராஜ் படமா... ரெண்டு அம்சங்கள்லயும் திருப்தியைக் கொடுக்க முடியுமா, அது சாத்தியமான்னு சந்தேகப்பட முடியாத அளவுக்குத் திருப்தியான, நிறைவான படத்தைக் கொடுத்திருக்கார். அந்த விதத்துல நாம லோகேஷ் கனகராஜைப் பாராட்டியே ஆகணும். 

vikram workers

விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் வெளியாகி இருக்கிற படம். கிட்டத்தட்ட நாலு வருஷ இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கார். அந்த நாலு வருஷ கேப்பை யோசிக்க முடியாத அளவுக்கு மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கார். அதிகம் அலட்டிக்காம, நான் பெரிய ஆள்னு பக்கம் பக்கமா டயலாக் பேசாம கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கார். சொல்லப்போனா அவர் நீளமான டயலாக் பேசுறதே ஒரே இடத்துலதான். அதுவும் அந்த கேரக்டருக்கான தன்னிலை விளக்கம்தான். 

மகனை இழந்த வலி, பேரன் மீதான பாசம், மருமகளே தப்பா நினைச்சாலும் அதுக்காக கடமையைச் செய்யத் தவறாமல் இருப்பதுன்னு கர்ணன் அலைஸ் விக்ரம் கேரக்டருக்கு 100 சதவீதம் நியாயம் செய்திருக்கார். மொத்த ஸ்கீரீன் ஸ்பேசையும் தானே எடுத்துக்காத அந்தப் பெருந்தன்மையும் பிடிச்சிருக்கு. ஆக்சுவலி பத்தல பத்தல பாட்டுல என்னைய ஆட விட்டு வேடிக்கை பார்க்குறீங்களடா, ஆடுங்கடான்னு சொல்வார். உண்மையைச் சொல்லணும்னா இதுல அவர் மத்தவங்களை நடிக்கவிட்டு வேடிக்கை பார்த்திருக்கார்னு சொல்லலாம். நீங்க நல்லவரா, கெட்டவரான்னு நாயகன் படத்தை ஞாபகப்படுத்துற மாதிரி மருமகள் கேட்டதும், அவர் சொல்ற பதில் செம்ம. குடிகாரன், வுமனைஸர், நல்லவரா, கெட்டவரான்னு ஒவ்வொரு ஸ்டேஜையும் தாண்டி கமல் யார்னு தெரிய வர்ற இடம் ரொம்பவே சூப்பர்ப் தருணம். 

vikram shooting

மேலும் படிக்க | கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

ஃபஹத் பாசில்... மனுஷன் எந்த கேரக்டர் கொடுத்தாலும் பின்னி எடுத்துடறார். இதுல உளவுத்துறை ஏஜெண்ட் அமர் கதாபாத்திரத்தில் அட்டகாசம் பண்ணியிருக்கார். ஸ்லீப்பர் செல்லா இருந்தாலும் ஒரு கேஸை விசாரிக்கிற விதம், டீட்டெய்ல் கலெக்ட் பண்ற மெத்தட், யாரையும் நம்பாம வேலைக்கு நேர்மையா இருக்குறது, காதலியிடம் கூட தன் வேலையைப் பற்றியும், தன்னைப் பற்றியும் எந்த உண்மையும் சொல்லாம ரகசியத்தைக் காப்பாத்துறதுன்னு பக்காவா பண்ணியிருக்கார். கண்ணாலயே மிரட்டி தேவைப்பட்ட விஷயத்தை வாங்குற வித்தைல்லாம் வேற லெவல். அந்த கேரக்டர் அப்படியே இல்லாம கொஞ்சம் பலவீனமாக்குனதுதான் கன்வின்ஸிங்கா இல்லை. 

சந்தனம் கேரக்டர்ல விஜய் சேதுபதி அசால்ட்டா பொருந்திப் போறார். வழக்கமா சீனியர் ஹீரோக்கள் தங்களோட அடுத்தடுத்த தலைமுறை நடிகர்கள் படங்கள்ல வில்லனாவோ, குணச்சித்திர நடிப்புலயோ, அப்பா- மாமா மாதிரியான கேரக்டர்லயோ நடிப்பாங்க. ஆனா, கரண்ட்ல ஹீரோவா இருக்கிற ஒருத்தர் தனக்கு முந்தின தலைமுறை ஹீரோக்கள் படங்கள்ல அப்படி நெகட்டிவ், குணச்சித்ர கேரக்டர்ல நடிக்குறது ரொம்பவே ரேரான விஷயம். ஜெய்சங்கர், முத்துராமன் மாதிரியான ஹீரோக்கள் எல்லாம் ரஜினி, கமல் படங்கள்ல  வில்லன், குணச்சித்ர ரோல்ல நடிச்சாங்க. 

ஆனா, விஜய் சேதுபதி மட்டும்தான் ரஜினி, கமல், விஜய் படங்கள்ல நெகட்டிவ் ரோல் பண்ணி இருக்காரு. இப்படி எந்த ஒரு ஹீரோவாவது நடிக்க முன்வருவாங்களாங்கிறதுதான் சந்தேகம்தான். அந்தவிதத்துல விஜய் சேதுபதியைப் பாராட்டியே ஆகணும். 66 குடும்ப உறுப்பினர்கள் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தின் ஆளுமையா, டாக்டரா, போதைப்பொருள் சப்ளை பண்ற வேட்டி வகையறாவோட ஆணி வேரா நடிச்சிருக்கார். உடல் மொழி, வசன உச்சரிப்புன்னு இதுக்கு முன்னாடி பார்த்த விஜய் சேதுபதி கொஞ்சம் மாறி நடிச்சிருக்கிறது பெரிய பிளஸ். 

fahath fazil

காளிதாஸ் ஜெயராம் கேமியோ அளவுக்குத்தான் ரோல் பண்ணியிருக்காரு. காயத்ரிக்குப் பெரிய அளவுல ரோல் இல்லை. கண்மூடித்தனமா காதல் கணவனை நம்புற அப்பாவியான கேரக்டர். இவங்களைத் தாண்டி 50க்கும் மேற்பட்ட தெரிந்த முகங்கள், துணைக் கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்காங்க. அதுல பாவக்கதைகள் ஆந்தாலஜில நடிச்ச ஜாஃபர் சாதிக் பட்டையக் கிளப்பி இருக்கார். செம்பன் வினோத் ஜோஸ், நரேன், இளங்கோ குமாரவேல், சந்தானபாரதி, அருள்தாஸ், மாரிமுத்துன்னு எல்லோருமே கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தோட நோக்கத்தை நிறைவேத்துறாங்க. ஹரீஷ் உத்தமன், ஹரீஷ் பெராடி, சம்பத்ராம், கோகுல்நாத், மாரிமுத்து, ரமேஷ் திலக், மகேஸ்வரி, மைனா நந்தினின்னு பலர் செட் ப்ராப்பர்ட்டியே வந்து போறாங்க. கமல் வீட்ல வேலைக்காரியா நடிச்ச அந்த அம்மா சும்மா மெர்சல் பண்ணிட்டாங்க. எதிர்பார்க்காத நேரத்தில் மிரட்டல் நடிப்பு. 

மேலும் படிக்க | விக்ரம்: சென்சார்ல கட் ஆன சீன்ஸ் என்னென்ன தெரியுமா?! - இதோ பட்டியல்!

அனிருத் இசையில் பாடல்கள் பத்தல பத்தல பாட்டும், டைட்டில் ட்ராக்கும், போர் கொண்ட சிங்கம் பாட்டும் செம்ம அனுபவம். பின்னணி இசையில வேற லெவல்ல உழைச்சிருக்கிறது தெரியுது. க்ரிஷ் கங்காதரன் அப்படியே மாஃபியே கேங், போதைப் பொருள் நெட்வொர்க், போலீஸ் டிப்பார்ட்மென்ட் உள்ளடி வேலைகளை கேமராவுக்குள்ள கேப்ச்சர் பண்ணியிருக்கார். பிலோமின் ராஜோட எடிட்டிங் கிரிஸ்ப் அண்ட் ஷார்ப். இன்னும் கொஞ்சம் நீளாதோன்னு தோண வைக்குது. 

படத்தோட பெரிய பெரிய பெரிய பலம்னு சொல்லணும்னா லோகேஷ் கனகராஜோட ரைட்டிங்னுதான் சொல்லணும். பயங்கரமான எஃபர்ட் போட்டிருக்கார். அதுக்கு கை மேல பலன் கிடைச்சிருக்கு. ஹீரோ படமா, டைரக்டர் படமான்னு பார்த்தா ரெண்டுலயும் சாதிச்ச படம் ரொம்ப கம்மி. அந்த கம்மியான லிஸ்ட்ல சும்மா ஸ்டைலா கெத்தா சேர்ந்திருக்கார் லோகேஷ். கமலுக்கு இவ்ளோ கம்பீரமான படம் அமைஞ்சு எவ்ளோ வருஷமாச்சுன்னு ஏக்கப்படுறதைத் தவிர்க்க முடியலை. 

காஸ்டிங் செலக்‌ஷன்ல அப்படி ஒரு நேர்த்தி. பார்த்துப் பார்த்து செலக்ட் பண்ணியிருக்கார். அவருக்கு எவ்ளோ அப்ளாஸ்னாலும் கொடுக்கலாம். இயக்குநர் ரத்னகுமார் லோகேஷுடன் இணைந்து வசனம் எழுதியிருக்கார். உறுத்தாத, துருத்தாத, நீட்டி முழக்காத வசனங்கள் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. 

vikram kamal

விஸ்வரூபம் படத்துல இங்கே ஒவ்வொருத்தருக்கும் டபுள் ரோல்னு கமல் சொல்வார். அந்த வசனம் இந்தப் படத்துல நிஜமாகியிருக்கு. கமலுடன் இருக்கிற ஒவ்வொரு கேரக்டரோட டைமன்ஷன் தெரியும்போது பயங்கர கூஸ்பம்ப்ஸ். கொஞ்சம் திரைக்கதை லேக் ஆகுதேன்னு பார்த்தா உடனே வர்ற ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் வேற மாதிரி ஃபீலைக் கொடுத்துடுது. சர்ப்ரைஸ் எலமெண்ட்ஸ்ல சிக்ஸர் அடிச்சே ஆகணும்னு தனியா ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்க போல. திரைக்கதை எழுதுன லோகேஷுக்கே அத்தனை கிரெடிட்ஸும்.

1986-ல் வெளிவந்த விக்ரம் படத்தின் கதையை இதுல சேர்த்த விதம், கைதி படத்தோட ஆன்மாவை இன்டர்லிங்க் பண்ண லாவகம், சூர்யாவோட கேமியோ மூலம் கொடுத்த அடுத்த படத்துக்கான லீட்னு தமிழ் சினிமாவுல இப்படி ஒரு முயற்சி பாராட்டுக்குரியது. 

மேலும் படிக்க | விக்ரம் படத்தை தொடர்ந்து மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி?

ரத்தம் தெறிக்கத் தெறிக்கக் காட்டப்படும் வன்முறைக் காட்சிகள், அமர் கேரக்டரை திடீர்னு டம்மி ஆக்குறது, சந்தனத்தை ஓடவிட்டு வேடிக்கை பார்க்குறதுன்னு சில மைனஸும் படத்துல இல்லாம இல்லை. இதையெல்லாம் தாண்டி பார்த்தோம்னா கமல்ங்கிற நடிப்பு ராட்சசனோட திறமையை, பெருமையை, ஆளுமையை இப்போ இருக்குற 2கே கிட்ஸுக்கு முழுசா நிரூபிக்கிற மாதிரியும், ஃபஹத், விஜய் சேதுபதின்னு தனித்துவக் கலைஞர்களின் போர்ஷன்களைக் கையாண்ட விதத்துலயும் விக்ரம் வேற லெவல் தரமான கச்சிதமான கமர்ஷியல் சினிமா. 

இந்த அனுபவத்தைத் தவறவிடாதீங்க. மறக்காம தியேட்டருக்குப் போய் பாருங்க. விக்ரமில் மூழ்கித் திளையுங்கள்.!

 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News