டி20யில் ரோஹித், விராட்... ஆனால் இவர்களுக்கு வாய்ப்பில்லை - இந்திய அணி அறிவிப்பு!

IND vs AFG: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 7, 2024, 08:45 PM IST
  • விராட் கோலி, ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.
  • ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.
  • சஞ்சு சாம்சனும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
டி20யில் ரோஹித், விராட்... ஆனால் இவர்களுக்கு வாய்ப்பில்லை - இந்திய அணி அறிவிப்பு! title=

India National Cricket Team: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஜன.11, 14, 17 ஆகிய தேதிகளில் இந்த போட்டிகள் முறையே இந்தியாவின் பஞ்சாப், இந்தூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.

ஹர்திக், சூர்யகுமார் இல்லை

இதில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய டி20 அணியில் இடம்பெற்றுள்ளனர். அதாவது, 2022ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி அன்று டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக போட்டியில்தான் விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் விளையாடினர். அதில் அடைந்த மோசமான தோல்விக்கு பின் இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவே இல்லை, ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி உள்ளனர். 

ரோஹித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், அவருக்கு கடந்தாண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பையில் காலில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டது. தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவதால் இந்த தொடரிலும் அவர் சேர்க்கப்படவில்லை, ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த அக்டோபரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டு, தொடரையும் வென்று கொடுத்தார்.

மேலும் படிக்க | பொதுவெளியில் சிகரெட் பிடித்த தோனி! இணையத்தில் வீடியோ வெளியானதால் அதிர்ச்சி!

கேப்டனாக என்ட்ரி கொடுக்கும் ரோஹித்

அதன்பின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டி மழையால் ரத்தாக 1-1 கணக்கில் தொடர் சமன்நிலை பெற்றது. இதில் கடைசி மூன்றாவது போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவரும் காயத்தில் இருந்து மீண்டும் வருவதால், இந்த தொடரில் அவர் இடம்பெறவில்லை. இதனால், ரோஹித் எப்படி போனாரோ அப்படியே அணிக்கும் திரும்பி உள்ளார். அதாவது இந்த தொடரில் ரோஹித் கேப்டனாக செயல்படுகிறார். 

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கும் கை விரலில் காயம் ஏற்பட்டதால் அவரும் இந்த தொடரில் இடம்பெறவில்லை. எனவே, மிடில் ஆர்டரை பலப்படுத்த விராட் கோலி அணிக்கு திரும்பி உள்ளார் எனலாம். ரோஹித், யஷஸ்வி ஓப்பனிங் இறங்க சுப்மான் கில் ஒன்-டவுண் இறங்குவார். விராட் கோலி நான்காவது இடத்தில் இறங்க வாய்ப்புள்ளது. திலக் வர்மா, ரிங்கு சிங் என மிடில் ஆர்டரும் பலமுடன் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கேஎல் ராகுலுக்கு கல்தா

விக்கெட் கீப்பிங் ஆப்ஷனில் இஷான் கிஷன் தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார். தற்போது அவருக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்துள்ளது பிசிசிஐ என கூறப்படுகிறது. இஷான் கிஷன் இல்லாததால் விக்கெட் கீப்பிங் ஆப்ஷனாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுலும் கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் டி20 அணியில் இடம்பெறாத நிலையில், அந்த நிலை இதிலும் தொடர்கிறது.

ஆல்-ரவுண்டர்களில் ஜடேஜா இடம்பெறவில்லை. பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் ஆகியோர் தொடர்ந்து டி20 அரங்கில் அமரவைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அது இதிலும் தொடர்கிறது. முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீபக் சஹாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த டி20 தொடருக்கு பின் இந்திய அணி டி20 உலகக் கோப்பையில்தான் விளையாடும். நடுவே ஐபிஎல் தொடர் இருக்கிறது. எனவே, டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு முக்கியமான தொடர் இதுவாகும். 

இந்திய ஸ்குவாட்

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவி பீஷ்னோய், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்

மேலும் படிக்க | அரசியலில் குதித்த அம்பதி ராயுடு... இன்று திடீர் பல்டி - ஒரு வாரத்தில் என்னாச்சு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News