இறுதிப்போட்டியில் SRH... வீழ்ந்தது ராஜஸ்தான் - பாட் கம்மின்ஸின் பக்கா கேப்டன்ஸி!

SRH vs RR Match Highlights: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் குவாலிஃபயர் 2 போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.  

Written by - Sudharsan G | Last Updated : May 24, 2024, 11:44 PM IST
  • ஷாபாஸ், அபிஷேக் சர்மா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
  • ஷாபாஸ் அகமது ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
  • இறுதிப்போட்டி வரும் மே 26ஆம் தேதி நடைபெறுகிறது.
இறுதிப்போட்டியில் SRH... வீழ்ந்தது ராஜஸ்தான் - பாட் கம்மின்ஸின் பக்கா கேப்டன்ஸி! title=

SRH vs RR Match Highlights: இந்தியன் பரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில் குவாலிஃபயர் 1 போட்டியில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை அடித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளாசென் 50 ரன்களை அடித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சில் ஆவேஷ் கான், போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஸ்பின்னர்களான அஸ்வின், சஹால் ஆகியோர் 8 ஓவர்களை வீசி 77 ரன்களை கொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை. 

தொடக்கம் சொதப்பல்

தொடர்ந்து, 176 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடிய நிலையில், மறுமுனையில் இருந்த டாம் கோஹ்லர்-காட்மோர் ரன் அடிக்க திணறினார். இதனால், அந்த அணிக்கு பவர்பிளேவில் அழுத்தம் அதிகமானது. தொடர்ந்து, காட்மோர் 16 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், புவனேஷ்வர் வீசிய பவர்பிளேவின் கடைசி ஓவரில் ஜெய்ஸ்வால் மொத்தம் 19 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் ராஜஸ்தான் 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை எடுத்தது. 

மேலும் படிக்க | ஐபிஎல் கோப்பையை வென்ற ஜாம்பவான்கள்... அதுவும் தலைமை பயிற்சியாளராக இருந்து...!

8வது ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு பிரச்னை ஆரம்பித்தது. அதாவது அந்த ஓவரில் சுழற்பந்துவீச்சும் தொடங்கியது. ஷாபாஸ் அகமது வீசிய அந்த ஓவரின் 5ஆவது பந்தில் ஜெய்ஸ்வால் 42(21) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கடுத்த ஓவரையும் மற்றொரு இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அபிஷேக் சர்மா வீசினார். இந்த ஓவரில் சஞ்சு சாம்சன் 10 ரன்களில் வீழ்ந்தார். 

சுழலில் சிக்கிய ராஜஸ்தான்

அடுத்த மூன்று ஓவர்களில் வெறும் 13 ரன்களே எடுக்கப்பட்ட நிலையில், 12ஆவது ஓவரின் முதல் பந்திலேயே ரியான் பராக் பெரிய ஷாட்டுக்கு போக ஷாபாஸ் பந்துவீச்சில் அபிஷேக் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் வெறும் 6 ரன்களை எடுத்திருந்தார். விக்கெட்டுகள் வரிசையாக விழ, ஜூரேலுக்கு நிலையான பார்ட்னர்ஷிப் கொடுக்க அஸ்வின் களமிறக்கப்பட்டார். ஆனால் அந்த திட்டமும் சொதப்பியது. அதே ஓவரின் நான்காவது பந்தில் அஸ்வின் போல்டாகி டக் அவுட்டானார். பந்து நன்றாக சுழன்றதால் அவரால் கணிக்கவே முடியவில்லை எனலாம். 

அடுத்து மார்க்ரம் 13வது ஓவரின் கடைசி பந்தில் துருவ் ஜூரேல் சிக்ஸ் அடித்து ஆறுதல் அளித்தார். இந்த சிக்ஸர் சுமார் 34 பந்துகளுக்கு பின் வந்த பவுண்டரியாகும். அதாவது இதற்கு முன் ஜெய்ஸ்வால் 9ஆவது ஓவரில் சிக்ஸ் அடித்திருந்தார். ஜூரேலுக்கு ஹெட்மயர் துணையாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அபிஷேக் சர்மாவின் ஓவரில் போல்டாகி ஆட்டமிழந்தார். இருப்பினும் துருவ் ஜூரேல் அடுத்த 3 ஓவர்களில் 30 ரன்களை அடித்து போட்டியை உயிரோட்டமாக வைத்திருந்தார், பாவெல் நிதானமாக இருந்தார். இருப்பினும் நடராஜனின் 18ஆவது ஓழரில் பாவெல் 6 ரன்களில் வீழ்ந்தார். 

இறுதிப்போட்டியில் கேகேஆர் vs எஸ்ஆர்ஹெச்

19வது ஓவரில் 10 ரன்கள் அடிக்கப்பட்டது. இதன்மூலம், கடைசி ஓவருக்கு ராஜஸ்தான் அணிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும் 5 ரன்களே கடைசி ஓவரில் அடிக்கப்பட்டது. இதன்மூலம், 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இதன்மூலம், நாளை மறுநாள் (மே 26) அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த அணிகள் ஆகும். கடந்த முறையும் முதலிரண்டு இடங்களை பிடித்த சென்னை, குஜராத் அணிகளே இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கேகேஆர் இதற்கு முன்னர் 2 முறையும், எஸ்ஆர்ஹெச் 1 முறையும் கோப்பையை வென்றுள்ளன. 

உலகத்தரமான பந்துவீச்சு

எஸ்ஆர்ஹெச் பேட்டிங் இன்று சுமாராக இருந்தாலும் பந்துவீச்சும், பீல்டிங்கும் உலகத்தரத்திற்கு இருந்தது. பாட் கம்மின்ஸின் கேப்டன்ஸி அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று. ஆடுகளத்தின் தன்மையை உடனடியாக உணர்ந்த பாட் கம்மின்ஸ், ஷாபாஸ் அகமது - அபிஷேக் சர்மா ஆகிய இரண்டு இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி வீதம் அருமையாக இருந்தது. ஷாபாஸ் - அபிஷேக் சர்மா ஆகியோர் மட்டும் 8 ஓவர்கள் வீசி 47 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நடராஜனும் மூன்று ஓவர்களை வீசி வெறும் 13 ரன்களையே கொடுத்தார், அதிலும் முதல் ஓவரில் 7 ரன்களை கொடுத்தும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகன் விருதை ஷாபாஸ் வென்றார். 

பாட் கம்மின்ஸின் கேப்டன்ஸி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சூழலை புரிந்துகொண்டதை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் புரிந்துகொள்ளவில்லை எனலாம். பனி வருமா வராதா என இரு அணிகளும் குழப்பத்தில் இருந்தாலும், பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் மற்றும் மற்ற ராஜஸ்தான் பேட்டர்கள் அவசரப்பட்டதே தோல்விக்கு முக்கிய காரணம். இறுதிப்போட்டியில் கேகேஆர் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சுனில் நரைன் - வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹைதராபாத் அணியின் ஷாபாஸ் - மயங்க் மார்க்கண்டே ஆகியோர் போட்டியில் முக்கிய பங்கை ஆற்றுவார்கள். இருப்பினும், சூழல் எப்படி மாறும் என்பது தெரியாது என்பதால் யார் கோப்பையை முத்தமிட போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலம்... மும்பை அணி டாட்டா சொல்ல உள்ள 5 ஸ்டார் வீரர்கள் - அவரும் லிஸ்ட்ல இருக்காரு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News