தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்தின்படி பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது.
2019-20-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. வருகிற 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஒவ்வொரு தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 400 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 தேர்வர்களும், 6 ஆயிரத்து 356 தனித்தேர்வர்களும் என மொத்தம் 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் இந்த பொதுத்தேர்வை எழுத இருக்கின்றனர்.
தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
கடந்த மாா்ச், ஜூன் 2019- ஆம் ஆண்டில் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல், தற்பொழுது பிளஸ் 2 வகுப்பு படித்துவரும் 50,650 பள்ளி மாணவா்களும் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் தற்போது நடைபெறும் (மாா்ச் 2020 ) தேர்வின்போது எழுதுகின்றனர்.
இந்த ஆண்டு வேலூர், கடலூர், புதுக்கோட்டை, மதுரை, கோவை, பாளையங்கோட்டை, திருச்சி, சேலம் மற்றும் புழல் சிறைகளில் உள்ள 100 ஆண் சிறை கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை மாவட்டத்தில், 411 பள்ளிகளைச் சேர்ந்த 46,779 மாணவா்கள் 159 தேர்வு மையங்களில் தேர்வெழுதுகின்றனர். அதேபோன்று புதுச்சேரியில் 151 பள்ளிகளைச் சோ்ந்த 14,779 மாணவா்கள் 40 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.