எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடையே, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது!
அதிமுக, பாஜக, பாமக, புதிய தமிழகம், தேமுதிக, புதிய நீதிக் கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாக கூட்டணி அமைத்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. கடந்த சில நாட்களாக இந்த கூட்டணியில் வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அதற்கான ஒப்பந்தம் கையெழுதாகியுள்ளது.
இன்று மாலை சென்னை கிரவுண்ட் பிளாசா ஹோட்டலில், அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நடுவே கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பில் கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதிதான் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், தமிழ் மாநில காங்கிரசை அதிமுக கூட்டணியில் சேர்க்க சிக்கல் இருந்திருக்கும். தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதால், வாசன் கட்சிக்கு காலதாமதமாக தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
21 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும், தற்போதைய நிலவரப்படி, கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறைவடைந்துள்ளது என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடன் பேசிய ஜி.கே.வாசன், பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை கண்டித்ததோடு, குற்றவாளிகளுக்கு உட்சகட்ட தண்டனை வழங்க வேண்டும் என்று, கேட்டுக்கொண்டார்.