அண்ணாமலையின் அடடே மாற்றம்: நடந்தது என்ன?

பரபரப்பான, தடாலடியான அரசியல் பாணியிலிருந்து அண்ணாமலை மாறியிருப்பதாகத் தெரிகிறது. செய்தியாளர்களிடம் அவர் காட்டிய அக்கறை அரசியல் நாகரிகத்தின் அடுத்தகட்டத்துக்கு அவர் நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னணி குறித்து முழுமையாகப் பார்க்கலாம். 

Written by - Chithira Rekha | Last Updated : Nov 6, 2022, 11:51 AM IST
  • அண்ணாமலையின் அடடே மாற்றம்
  • செய்தியாளர்களிடம் அக்கறை காட்டிப் பேச்சு
  • தடாலடியான அரசியல் பாணியிலிருந்து மாறிய அண்ணாமலை
அண்ணாமலையின் அடடே மாற்றம்: நடந்தது என்ன? title=

தமிழக அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அனைவருமே அண்மைக் காலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அரசியல் நிலைப்பாட்டில் தடாலடியிலிருந்து மென்மையான போக்குக்கு மாறி இருப்பதாகக் கூறுகிறார்கள்.  

திமுக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கடலூரில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேட்டியளித்த அவர், மரத்தின் மேல குரங்கு தாவுவது போல் சுத்திச் சுத்தி வருவது ஏன் என செய்தியாளர்களை அவமதிக்கும் வகையிலும், ஒருமையிலும் பேசினார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும் அவதூறாகப் பேசினார். இதனைத் தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மன்னிப்பு கேட்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினார் அண்ணாமலை. 

கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் உள்கட்சியில் நிகழ்ந்த பூசல் காரணமாக ஏற்கெனவே கோபத்தில் இருந்த அண்ணாமலை அதன் வெளிப்பாடாகவே கடலூரில் செய்தியாளர்களிடம் அவ்வாறு பேசியதாகக் கூறப்பட்டது. கோவைச் சம்பவத்தைக் கண்டித்து பாஜக சார்பில் அக்டோபர் 31-ம் தேதி கோவையில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுமென, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் அறிவித்தனர். இந்த கடையடைப்பிற்குத் தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த முழு அடைப்புக்கு பாஜக மாநிலத் தலைமை அழைப்பு விடுக்கவில்லை என அண்ணாமலை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்னை புறக்கணியுங்கள் - அண்ணாமலை அடாவடி

மேலும், கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதிக்குச் சென்ற அண்ணாமலை, பின்னர் கோயிலுக்குச் சென்று பூசாரிகளிடம் சிறிது நேரம் பேசினார். ஆனால், இந்த நிகழ்வில் வானதி சீனிவாசனும், சி.பி.ராதாகிருஷ்ணனும் பங்கேற்கவில்லை. அண்ணாமலைக்கும், பாஜகவில் உள்ள சீனியர்களுக்கும் பனிப்போர் நிலவுவதாக ஏற்கெனவே கூறப்பட்ட நிலையில், இந்த கடையடைப்பு அழைப்பில் அது அப்பட்டமாக வெளிப்பட்டது. 

அண்ணாமலை செய்தியாளர்களை அவமதித்துப் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த மே மாதம் பிரதமர் மோடி சென்னை வந்தபோது, அவரை வரவேற்க விதிமுறைகளை மீறி பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததைக் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் இருக்கிறதா எனச் செய்தியாளரிடம் கேட்டார். இதற்கு அந்தச் செய்தியாளர், தன்னிடம் இருக்கும் ஆதாரம் குறித்து விளக்க ஆரம்பித்தபோது, அதைக் காது கொடுத்துக் கேட்காமல், அவரைப் பேசவிடாமல் தடுத்த அண்ணாமலை, உங்களுக்கு “200 ரூபாய் நிச்சயம்” என்று செய்தியாளரை அவமதிக்கும் வகையில் கூறினார். 

செய்தியாளர்களை அவமதிப்பது மட்டுமின்றி, தேர்தல் சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை மிரட்டும் வகையில் பேசியது என அந்தப் பரபரப்பு அரசியல் பாணியை இப்போதும் தொடர்ந்து வருகிறார். அதிலும், அண்ணாமலைக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையேயான வார்த்தைப் போர் அரசியல் நாகரிகத்தைத் தாண்டிச் செல்வது குறித்த விமர்சனங்களும் எழத் தவறுவதில்லை. அண்ணாமலையின் சொல்லும் செயலும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பினாலும் அவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘’ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் இயேசு கிடையாது. அதற்கான தக்க பதிலடி கொடுப்பேன்.” என்று தன்னை நியாயப்படுத்துகிறார். இதையெல்லாம் பார்த்தால், “நான் இதுவும் பேசுவேன்... இதற்கு மேலும் பேசுவேன்” என்று அண்ணாமலை சொல்வதாகத்தான் புரிந்துகொள்ள வேண்டி இருந்தது.

 

திமுக மீது அண்ணாமலை தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தாலும், அவர்கள் தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு பதில் சொல்வது அமைச்சர்களும், செய்தித் தொடர்பாளர்களும்தான். அண்ணாமலையின் பேச்சுக்கு அரசியல் ரீதியான விலை அவ்வளவுதான் என்ற பாணியையே திமுகவும் கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் தான்,  செய்தியாளர்களிடம் பாதுகாப்பாக இருங்க...மழையால் நனையாதீங்க..என அன்பாகப் பேசியிருக்கிறார் அண்ணாமலை. ஆறே நாட்களில் அவரது பாணி மாறியுள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 

பரபரப்பு அரசியல் பாணி நீண்ட நாட்களுக்கு உதவாது என்பதையும், ஊடகங்களை அனுசரித்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் பாஜக மேலிடம் அறிவுறுத்தியதே அண்ணாமலையின் இந்த மாற்றத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. இதில் அதிமுகவே அண்ணாமலைக்குப் பாடமாகவும் ஆகியுள்ளது. அதிமுக மூத்த தலைவர்கள் திமுக மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் எப்போதும் அரசியல் நாகரிகத்திற்கு உட்பட்டே இருக்கும். கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து கொண்டு எளிதில் உணர்ச்சி வசப்படுவது அவரது தேர்வையே கேள்விக்குறியாக்கும் என்பதால், அண்ணாமலையும் தனது நிலைப்பாட்டை மென்மையாக்கிக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க | கோவை சம்பவம்... அரசியல் ஆதாயம் தேடும் பாஜக - திருமாவளவன் விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News