தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என எண்ணெய் வானிலை மையம் தெரிவித்துள்ளது!
பெய்ட்டி அதி தீவிர புயல் எதிரொலியாக, தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பழவேற்காட்டில், மீனவ மக்கள் மீட்கப்பட்டு, புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக மையம் கொண்டுள்ள பெய்ட்டி, மணிக்கு 23 கிலோ மீட்டராக வேகம் அதிகரித்து ஆந்திராவை நோக்கி செல்கிறது. இன்று பிற்பகல் புயலாக வலுகுறைந்து காக்கிநாடா கடற்கரை பகுதியில் பெய்ட்டி கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறுகையில், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும் என அறிவித்துள்ளார்.
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் பெய்ட்டி புயல், தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து, ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கும். இதனால் மீனவர்கள் இன்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்த வரை அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக வழக்கமான அளவை விட வெப்பம் 4 சதவீதம் குறைவாகவே உள்ளது என்றார்.