கிடுகிடுவென ஏறும் அத்தியாவசிய பொருள்களின் விலை - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன?

CM Stalin Letter To Piyush Goyal: மாதம்‌ ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக்‌ டன்‌ கோதுமை, துவரம்‌ பருப்பு ஆகியவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 12, 2023, 12:43 PM IST
  • இந்த பொருள்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள்‌ மூலம்‌ விற்பனை செய்யப்படும் - முதல்வர்
  • இந்த பொருள்களின் விலையும் அங்கு குறைவாக விற்பனை செய்யப்படும் - முதல்வர்
  • இந்த பொருள்களின் இறக்குமதியை விரைவுப்படுத்துமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
கிடுகிடுவென ஏறும் அத்தியாவசிய பொருள்களின் விலை - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன? title=

CM Stalin Letter To Piyush Goyal: அத்தியாவசிய உணவுப்‌ பொருட்களின்‌ விலை உயர்வினைக்‌ கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய ஜவுளி, வர்த்தகம்‌ மற்றம்‌ தொழில்‌, நுகர்வோர்‌ விவகாரங்கள்‌, உணவு மற்றும்‌ பொது விநியோகத்‌ துறை அமைச்சர்‌ பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார். ‌

மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும்

முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதத்தில், உணவுப்‌ பொருள்‌ பணவீக்கத்தில்‌ காணப்படும்‌ கவலைக்குரிய நிலை குறித்து ஒன்றிய அரசின்‌ கவனத்திற்குக்‌ கொண்டுவர விழைவதாகவும்‌, உணவுப்‌ பொருட்களின்‌ விலை உயர்வு காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும்‌ பாதிப்பைக்‌ குறைப்பதில்‌ மாநில அரசுகளுக்கு உதவிடத்‌ தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும்‌ கேட்டுக்கொண்டுள்ளார்‌.

அத்தியாவசிய உணவுப்‌ பொருட்களான அரிசி, கோதுமை, துவரம்‌ பருப்பு, உளுத்தம்‌ பருப்பு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின்‌ விலை உயர்வினால்‌, ஏழை மற்றும்‌ நடுத்தரக்‌ குடும்பத்தினர்‌ பெரிய அளவில்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. ஏற்கெனவே, பணவீக்கத்தைப்‌ பொறுத்தவரையில்‌, 2023ஆம் ஆண்டு மே மாதத்தில்‌, தானியங்கள்‌ மற்றும்‌ அவற்றின்‌ தயாரிப்புகளுக்கு 12.65% ஆகவும்‌, பருப்பு வகைகள்‌ மற்றும்‌ அவற்றின்‌ தயாரிப்புகளுக்கு 6.56% ஆகவும்‌ இருந்தது என ஒன்றிய புள்ளியியல்‌ மற்றும்‌ திட்ட அமலாக்க அமைச்சகத்தால்‌ வெளியிடப்பட்டிருந்த நிலையில்‌, சமீபத்தில்‌ ஏற்பட்டுள்ள விலை உயர்வு இந்த நிலைமையை மேலும்‌ மோசமாக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | கரூரில் இரவிலும் தொடர்ந்த சோதனை! இந்த முறை என்ன சிக்கியது?

வெளிச் சந்தையை விட குறைவு

இந்த நிலையில்‌, கூட்டுறவு விற்பனை நிலையங்கள்‌ மற்றும்‌ உழவர்‌ சந்தைகள்‌ மூலம்‌ காய்கறிகள்‌, உணவு தானியங்கள்‌ மற்றும்‌ பருப்பு வகைகளை வெளிச்சந்தை விலையை விட குறைவான விலையில்‌ விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குறுகிய மற்றும்‌ நீண்டகால நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாகவும்‌, நியாயவிலைக்‌ கடைகள்‌ மூலம்‌ அனைத்துக்‌ குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌ மாதந்தோறும்‌ துவரம்‌ பருப்பு, சர்க்கரை, பாமாயில்‌ ஆகியவற்றை மானிய விலையில்‌ வழங்கப்படுகிறது.

அனைவருக்குமான பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ தேசிய உணவுப்‌ பாதுகாப்பு சட்டத்தின்கீழ்‌ பயன்பெறத்‌ தகுதியுடைய பயனாளிகள்‌ மட்டுமின்றி, மாநிலத்தில்‌ உள்ள அனைவருக்கும்‌ அரிசி மற்றும்‌ கோதுமையை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஒன்றிய அரசின்‌ வழிகாட்டுதலின்படி துவரம்‌ பருப்பு, உளுத்தம்‌ பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, மசூர்‌ பருப்பு, கோதுமை ஆகியவற்றின்‌ இருப்பு விவரங்களைத்‌ தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

ரேசன் கடைகளில் விற்பனை

இதுபோன்ற நடவடிக்கைகள்‌ மேற்கொண்டுள்ள போதிலும்‌, நாடு தழுவிய அளவில்‌ ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின்‌ காரணமாக, குறிப்பிட்ட சில அத்தியாவசிய உணவுப்‌ பொருட்களின்‌ விலை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஜூலை 10ஆம் தேதி அன்று விரிவான ஆய்வுக்‌ கூட்டம்‌ நடத்தி, தமிழ்நாட்டில்‌ கூட்டுறவு மற்றும்‌ தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ பல்பொருள்‌ அங்காடிகள்‌ / நியாயவிலைக்‌ கடைகள்‌ மூலம்‌ காய்கறிகள்‌, மளிகைப்‌ பொருட்களை விற்பனை செய்திட உரிய அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளன. 

மேற்கூறிய சில உணவுப்‌ பொருட்களை உள்நாட்டு அல்லது வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல்‌ செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள்‌ கோரப்பட்டு, அந்த நடவடிக்கை தற்போது செயல்பாட்டில்‌ உள்ளது. உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையைக்‌ கருத்தில்‌ கொண்டு, இந்தப்‌ பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஒன்றிய அரசு மேற்கொள்ளும்‌ நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விலை கட்டுப்படுத்தப்படும்

இதற்கிடையில்‌, ஒன்றிய அரசின்‌ கையிருப்பில்‌ இருந்து மேற்காணும்‌ உணவுப்‌ பொருட்களை விடுவிப்பது நிலைமையை எளிதாக்கும்‌ என்பதால்‌, மாதம்‌ ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக்‌ டன்‌ கோதுமை, துவரம்‌ பருப்பு ஆகியவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தப்‌ பொருட்கள்‌ கூட்டுறவு விற்பனை நிலையங்கள்‌ மூலம்‌ விற்பனை செய்யப்பட்டு விலை கட்டுப்படுத்தப்படும்‌" என குறிப்பிட்டுள்ளார்.  

இந்த விஷயத்தில்‌ ஒன்றிய ஐவுளி, வர்த்தகம்‌ மற்றும்‌ தொழில்‌, நுகர்வோர்‌ விவகாரங்கள்‌, உணவு மற்றும்‌ பொது விநியோகத்‌ துறை அமைச்சர்‌ உடனடியாகத்‌ தலையிட வேண்டுமென்று தனது கடிதத்தில்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ கேட்டுக்கொண்டுள்ளார்‌.

மேலும் படிக்க | TNPSC Group 4: கவுன்சிலிங் தேர்வுகள் அறிவிப்பு - விவரங்களை பார்ப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News