கொரோனா வைரஸ்: அலட்சியம் வேண்டாம், அவசரம் தேவை- PMK

கொரோனா வைரஸ் பரவல்....அலட்சியம் வேண்டாம், அவசரம் தேவை என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 

Last Updated : Mar 28, 2020, 11:39 AM IST
கொரோனா வைரஸ்: அலட்சியம் வேண்டாம், அவசரம் தேவை- PMK title=

கொரோனா வைரஸ் பரவல்....அலட்சியம் வேண்டாம், அவசரம் தேவை என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், அவற்றைத் தாண்டி, கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் பல ஓட்டைகள் இருப்பதாக மத்திய அரசே எச்சரித்திருப்பதும், அதை உறுதி செய்யும் வகையில், வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ சுற்றுப்பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் பரவியிருப்பதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் எவருமே வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ சென்று திரும்பியவர்கள் அல்ல.  அவர்களில் இருவர் மதுரையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் ஆவர். மேலும் இருவர் ஈரோட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர், சேலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவர் என 6 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றியதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

ஆனால், சென்னையிலிருந்து அரியலூர் சென்ற 25 வயது பெண்மணி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 39 வயது இளைஞர், 73 வயது முதியவர் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. இவர்கள் எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.  ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் இவர்களுக்கு தொடர்பு இல்லை. கொரோனா பரவலின் முதல் நிலை, இரண்டாம் நிலை ஆகியவற்றுக்கான எந்த வரையரைக்குள்ளும் வராத மூவருக்கு ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.  கொரோனா பரவலின் மூன்றாம் நிலைக்கு தமிழகம் சென்று விட்டதோ என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது.

இந்த ஐயத்தை, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜிவ் கௌபா எழுதியுள்ள கடிதம் உறுதி செய்கிறது. ‘‘இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை தொடங்கப்பட்ட ஜனவரி 18-ஆம் தேதியிலிருந்து விமான சேவைகள் நிறுத்தப்பட்ட மார்ச் 23-ஆம் தேதி வரை இந்தியாவுக்கு வந்த 15 லட்சம் பேரில் பெரும்பான்மையினருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்படவில்லை; இது இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்’’ என்று கூறியிருக்கிறார். இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்படாதவர்களின் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால் அவர்களை அடையாளம் கண்டு கண்காணிக்கும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய சூழலில் இந்தியாவில் சமூகப் பரவல் நிகழ்வதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.  அதைத் தடுக்க இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு ஆணையை முழுமையாக கடைபிடிப்பது தான் ஒரே தீர்வு ஆகும்.  பெரும்பான்மையான மக்கள் நாட்டையும் காக்க வேண்டும், நம்மையும்  காக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஊரடங்கு ஆணையை செம்மையாக கடைபிடித்து வருகின்றனர். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததாலோ, அலட்சியம் காரணமாகவோ பலர் ஊரடங்கு ஆணையை மீறி, சாலைகளில் நடமாடுவதும், சமூக இடைவெளியை கடைபிடிக்க மறுப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது. இதன் மூலம் அவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். இந்தப் போக்கை சம்பந்தப்பட்டவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நாடாக தென்கொரியா தான் இருக்கும் என்று ஒட்டுமொத்த உலகமும் கணித்தது. ஆனால், மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட சமூக இடைவெளி நடைமுறை காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பை 9332 பேருடனும், 132 உயிரிழப்புகளுடனும் கட்டுப்படுத்திய தென்கொரியா,  இயல்பு நிலையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் கொரோனா ஆபத்தை மிக எளிதாக முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவும், இத்தாலியும் முறையே உலகிலேயே அதிக பாதிப்பு, அதிக உயிரிழப்பு என்ற ஆபத்தான நிலையில் உள்ளன. இதற்கு காரணம் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்காதது தான். இந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா அல்லது அமெரிக்கா, இத்தாலியாக மாற வேண்டுமா? என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது. ஆகவே, மக்கள் ஊரடங்கை முழுமையாக மதித்து நம்மையும், நாட்டையும் காக்க வேண்டும்.

அதேநேரத்தில் நாள் முழுவதும் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் பிற்பகல் 2.30 மணி வரை தான் திறக்கப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது நல்ல நடவடிக்கை ஆகும். தமிழகத்தின் பல நகரங்களில் மளிகை மற்றும் காய்கறிகளை தொலைபேசி மூலம் அவர்களுக்கு பிடித்த கடைகளில் ஆர்டர் செய்தால், அவற்றை தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்க வகை செய்யப்பட்டிருக்கிறது. அந்த முறையை தமிழகம் முழுவதும் நீட்டிக்க வேண்டும். அதேபோல், அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகளை மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்க வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப் படுவதையும், மக்கள் ஒருவர் கூட வீடுகளுக்கு வெளியில் வராமல் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். 

Trending News