ரேபிட் டெஸ்டில் கொரோனாவை கண்டுபிடிக்க முடியாது, பிசிஆர்-ல் சோதிக்க வேண்டும் என்றால் எதற்காக காத்திருந்தீர்கள்..? என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!!
நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கலை எடுத்து வருகிறது. இந்நிலையில், ரேபிட் டெஸ்டில் கொரோனாவை கண்டுபிடிக்க முடியாது, பிசிஆர்-ல் சோதிக்க வேண்டும் என்றால் எதற்காக காத்திருந்தீர்கள்..? என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.... "தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய்த் தடுப்புப் பணிகளில் தொடக்கம் முதலே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் குழப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது முதல்வர் முதல் அதிகாரிகள் வரை முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கொடுப்பதும், பேட்டிகளின்போது பதற்றமடைந்து தடுமாறுவதும் மக்களிடையே பலத்த சந்தேகங்களையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
'கொரோனா 60 வயதுக்கு மேற்பட்டவர்களையும், நீரிழிவு நோயாளிகளையும் மட்டுமே தாக்கும். பணக்காரர்களால் மட்டுமே பரவும்’ என வாய்க்கு வந்தபடி சொன்னதோடு, சட்டப்பேரவையையும் விடாப்பிடியாக நடத்த நினைத்ததில் ஆரம்பித்து தமிழக ஆட்சியாளர்கள் கரோனாவை மிக அலட்சியமாகவே அணுகத் தொடங்கினர்.
கொரோனாவைக் கண்டறியும் PCR கருவிகளின் கையிருப்பு தொடர்பான தகவல்களிலும் இதே குளறுபடி தான். சுமார் 14,000 மட்டுமே கையிருப்பு இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளரும், அதனைத் தொடர்ந்து 24 ஆயிரம் கருவிகள் கையிருப்பு இருப்பதாக தலைமைச் செயலாளரும் ஒரு வாரத்திற்கு முன்பு கூறியிருந்த நிலையில், 1 லட்சத்து 95 ஆயிரம் PCR கருவிகள் அரசிடம் இருப்பதாக ஏப்ரல் 16 ஆம் தேதி திடீரென முதல்வர் அறிவித்தார்.
அப்படியானால் டாடாவும், மத்திய அரசும் கொடுத்த பிசிஆர் கருவிகளைத் தவிர எஞ்சியவற்றை எப்படி வாங்கினார்கள்? எப்போது இந்தக் கருவிகள் தமிழகத்திற்கு வந்தன? எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பிசிஆர் கருவிகள் இருக்கின்றன? என்ற விவரங்கள் எதையுமே இடையில் காணாமல் போயிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மீண்டும் வந்து பேட்டி கொடுத்தபோது கூட சொல்லவே இல்லை.
ஆட்சியாளர்கள் கூறுவதைப் போல 1 லட்சத்து 95 ஆயிரம் கருவிகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு PCR கருவியில் எத்தனை பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்? ஒரு பிசிஆர் கருவியில் 90 மாதிரிகள் வரை பரிசோதித்து கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியும் என்கிறார்களே, அது போன்ற கருவியை வைத்திருக்கிறார்களா? இல்லையென்றால், இதைவிட அதிகமாக பரிசோதிக்கும் திறன் கொண்ட 'ஆட்டோமேட்டட் பிசிஆர்' எனப்படும் அதிநவீன கருவிகளை வைத்திருக்கிறார்களா? அப்படியானால் இத்தனை நாட்களில் சில லட்சம் பேரை இவர்களால் சோதித்திருக்க முடியும்.
ஆனால், ஏப்ரல் 18 வரை 35036 பேரை மட்டுமே பரிசோதித்திருக்கிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் கூற்றுபடி, "ரேபிட் டெஸ்ட் கிட் மூலமாக கொரோனாவைக் கண்டுபிடிக்க முடியாது; மீண்டும் பிசிஆர் கருவியின் வழியாகவே சோதிக்க வேண்டும்" என்றால், இவர்கள் எதற்காக இத்தனை நாட்கள் காத்திருந்தார்கள்? கையில் இருந்த பிசிஆர் கருவிகளைக் கொண்டு 558 கட்டுப்பாட்டுப் பகுதிகளிலாவது முழுமையாக சோதனையைச் செய்து முடித்திருக்கலாமே?
இப்படி எழுகிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, தற்போது வரவழைக்கப்பட்டுள்ள ரேபிட் டெஸ்ட் கிட் உபகரணத்தின் விலையைச் சொல்ல முடியாமல் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மேலாண் இயக்குநர் நேற்று தடுமாறி, தத்தளித்த காட்சிகளில் விடை அடங்கியிருக்குமோ என்று மக்கள் நினைக்கிறார்கள்.
பேட்டியின்போது அவருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்த சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரும் கடைசிவரை அந்த உபகரணத்தின் விலையைச் சொல்லாமல், திரைமறைவு ஆலோசனைகளுக்குப் பிறகு சில ஆவணங்களை வெளியிட்டு ஒரு ரேபிட் கிட் விலை ரூ.600 என்று சொல்லியிருப்பது மக்கள் மனதில் புதிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று நோய்த்தடுப்புப் போராட்டத்தில் உலகமே நெருக்கடியான சூழலைச் சந்தித்து வரும் போது, மக்களின் உயிர் சார்ந்த விஷயத்தில் தமிழக அரசு இத்தகைய எண்ணிலடங்காத குழப்பங்களுடன் இயங்குவது மிகுந்த வேதனையளிக்கிறது.
எனவே, கரோனா நோய்த் தடுப்பில் தொடக்கம் முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவை குறித்து தமிழக ஆட்சியாளர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட்டு வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்" என TTV தினகரன் வலியுறுத்தியுள்ளார்.