செயலற்ற அரசால் அப்பாவி மக்கள் உயிர் பறிபோகிறது - MK ஸ்டாலின்!

செயலற்ற அதிமுக அரசால் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவி அப்பாவி மக்களின் உயிர்யிழந்து வருகின்றனர் என திமுக கண்டனம் தெரிரவித்துள்ளது!

Last Updated : Oct 23, 2018, 12:26 PM IST
செயலற்ற அரசால் அப்பாவி மக்கள் உயிர் பறிபோகிறது - MK ஸ்டாலின்! title=

செயலற்ற அதிமுக அரசால் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவி அப்பாவி மக்களின் உயிர்யிழந்து வருகின்றனர் என திமுக கண்டனம் தெரிரவித்துள்ளது!

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

"சென்னையில் ஏழு வயது இரட்டைக் குழந்தைகளும், ஒரே வாரத்தில் தமிழகம் முழுவதும் 13 பேரும் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகளும், அடித்தட்டு மக்களும் அவதிப்படுவதும், ஆங்காங்கே நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கணக்கில் காட்டப்படும் எண்ணிக்கையே இவ்வளவு என்றால், உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளோர் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பதற்றமாக இருக்கிறது.

ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் “கமிஷன்” பார்த்தால் போதும் என்ற ஒரே உள்நோக்கத்துடன் மிகக் கேவலமானதொரு ஆட்சியை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி நடத்திக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது. முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அ.தி.மு.க அரசும், அதன் அமைச்சர்களும் காட்டும் அலட்சியம் அப்பாவி மக்களின் உயிர்களை பறித்துக் கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலை தடுக்க போதிய நடவடிக்கைகள் இதுவரை அரசின் சார்பில் எடுக்கப்படவில்லை.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட எந்த மருத்துவமனைகளும் கொடிய இந்த காய்ச்சலை தடுப்பதற்கு உரிய முறையில் தயார் நிலையில் இல்லை. அரசின் சார்பில் மருத்துவ முகாம்கள் கூட பெருமளவில் நடத்தப்படவில்லை. “அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் இந்த காய்ச்சலின் பாதிப்பு இருக்கிறது” என்று கூறியிருக்கும் அரசு சுகாதாரத்துறை செயலாளர் “பன்றி, எலி, டெங்குக் காய்ச்சல் இருந்தால் சிக்கல் ஏற்படும்” என்று அபாய சங்கு ஊதியிருக்கும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கரும், முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமியும் அ.தி.மு.க வின் 47- ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே டெங்கு, பன்றி, எலிக் காய்ச்சல் அனைத்தையும் கட்டுப்படுத்தவும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தரமான அவசரச் சிகிச்சைகள் அளிக்கவும் உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு ஏற்றவாறு தமிழகத்தில் ஆரம்ப சுகாதாரம் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். செயலற்ற இந்த அ.தி.மு.க அரசை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மருத்துவர் அணி சார்பில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடத்தி, மருந்து மாத்திரைகள் வழங்கிட வேண்டும் என்றும், உயிர் பறிக்கும் காய்ச்சல் வருவதற்கு முன்பு ஒவ்வொருவரும் எடுக்க வேண்டிய “சுகாதார மற்றும் சுற்றுப்புறத் தூய்மை முன்னெச்சரிக்கை” நடவடிக்கைகள் என்னென்ன என்பதை விளக்கி மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்!

Trending News