சென்னை: கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவையின் இரண்டாம் கட்டத்தேர்தலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. ஆனால் வேலூர் தொகுதியில் அதிகளவு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, வேலூர் தொகுதிக்கான மக்களவை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் 13 கோடி ரூபாய் பணம் வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்த பணம் திமுக பொருளாளர் துரைமுருகன் சொந்தமானது என்ற நோக்கில் சூலூர் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
இதற்க்கு பதில் அளிக்கும் விதமாக திமுக பொருளாளர் துரைமுருகன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தங்களுடைய வீடு மற்றும் கல்லூரியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது 10 லட்சம் ரூபாய் மட்டுமே எடுத்துச் சென்றனர். ,13 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் இடம் தங்களுடையது இல்லை. ஆனால் சூலூர் தேர்தல் பரப்புரையில் பேசிய முதலமைச்சர் தன்னுடைய வீட்டிலிருந்து 12 கிலோ தங்கம், 13 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறுவது எப்படி என துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
தங்கம் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதை நிரூபித்தால் தமது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும், இல்லையெனில் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என சவால் விடுத்துள்ளார்.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் இந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.