சரியான காலம் வரும்போதுதான் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தமுடியும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலோடு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
இதில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் மீதான வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் மக்களவை தேர்தலுடன் இணைத்து 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் என திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள், தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இந்த மனு மீதான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. அப்போது, சரியான காலம் வரும்போதுதான் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தமுடியும். அவசர கதியில் நடத்த முடியாது. மேலும், வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் ஏப்ரல் 18 ஆம் 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என உத்தரவிட்டுள்ளது.