ED Case Dismissed By Madras High Court: சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான, ஓஷன் லைஃப் ஸ்பேசஸ் (OCEAN LIFE SPACES) நிறுவனத்தை எஸ்.கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடங்கினர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், நிறுவனத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை எஸ்.கே பீட்டர் தர மறுத்ததாகக் கூறி, ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் எஸ்.கே.பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் சுமார் 50 கோடி ரூபாய் வரை பணபரிமாற்றம் நடத்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா? என அமலாக்கத்துறை அதிகாரிகள், எஸ் கே பீட்டர் நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினர்.
நிறுவனம் தரப்பில் மனு
அதன் அடிப்படையில் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, ஆவணங்களுடன் ஆஜராகுமாறு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பீட்டருக்கும் சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து பீட்டர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "இருவருக்கும் இடையேயான தொழில் பிரச்னையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பித்தர அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அமலாக்கத்துறையின் வாதம்
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. ஓஷன் லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "இந்த நிறுவனத்துக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால், அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையை தொடர முடியாது" என வாதிட்டார். அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளோம்" என தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மூல வழக்கான மத்திய குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரிக்க முடியாது. எனவே, அமலாக்கத்துறை தொடர்ந்த அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும், மனுதாரர் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை நான்கு வாரங்களில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு வேளை மத்திய குற்றப்பிரிவு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டால், அமலாக்கத்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
அமலாக்கத்துறை என்பது சட்ட அமலாக்கம் சார்ந்த மத்திய அரசின் அமைப்பாகும். குறிப்பாக, நாடு முழுவதும் பொருளாதார சட்டங்களை அமல்படுத்துவதற்கும், பொருளாதார குற்றங்களை தடுக்கும் அதிகாரம் கொண்ட பொருளாதார புலனாய்வு நிறுவனம் ஆகும். அமலாக்கத்துறை மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறையின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ