Chennai Floods: தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச. 5) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய 'மிக்ஜாம்' புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும் படிக்க | மிக்ஜாம் புயல் எதிரொலி! 3வது நாளாக இன்றும் இந்த வசதிகள் கிடைக்காது!
'மிக்ஜாம்' புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும்" என்றார்.
மேலும், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஸ்டாலின் எழுதிய கடிதத்தை டி.ஆர். பாலு இன்று பிரதமரிடம் ஒப்படைப்பார்.
சென்னையின் வடசென்னை பகுதிகள், அசோக் நகர், அரும்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர் போன்ற சில பகுதிகள் இன்னும் மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீளவில்லை. இன்னும் பல பகுதிகளில் மின்சாரம் சேவை வழங்கப்படவில்லை. பால், குடிநீர், உணவு போன்ற அன்றாட தேவைகளுக்காக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கைக்குழந்தையுடனும், முதியவர்களுடனும் வீட்டில் இருப்பவர்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் இன்று உணவு விநியோகிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னையில் எழும்பூரில் இருந்து மட்டுமே புறப்பட்டு, மீண்டும் எழும்பூர் வந்தடையும். இந்த மார்க்கத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது
சென்னை கடற்கரை - திருவள்ளூர், அரக்கோணம் இடையே மற்றும் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையேயும் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. திருவொற்றியூர் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 2015 செயற்கை வெள்ளம்... இது இயற்கை வெள்ளம் - ஸ்டாலினின் விளக்கம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ