கலைஞர் முகம் பொறித்த 100 ரூபாய் நாணயம்! எங்கு எப்படி வாங்குவது?

கலைஞர் 100 ரூபாய் நாணயத்தை 10,000 ரூபாய் கொடுத்து வாங்கி கொள்ளலாம். அதற்கு மதிப்பு இல்லை, இருப்பினும் நீங்கள் பத்தாயிரம் கொடுத்து அந்த நாணயங்களை வாங்கிச் செல்லலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Aug 19, 2024, 02:20 PM IST
  • ஒரு 100 ரூபாய் நாணயம் விலை 10000.
  • யார் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம்.
  • சென்னையில் முக ஸ்டாலின் பேச்சு.
கலைஞர் முகம் பொறித்த 100 ரூபாய் நாணயம்! எங்கு எப்படி வாங்குவது? title=

சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுக மீனவர் அணி மாநில துணை தலைவருமான கேபி சங்கரின் மூத்த மகன் பிஎஸ் திலீபனுக்கும், ராயபுரம் ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்த ஆர் விஜயகுமாரின் மகள் பி. விசாலிக்கும் திருமணம் சுங்கச்சாவடி அருகில் உள்ள தங்க மாளிகையில் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் முக ஸ்டாலின் பேசியதாவது, இது நம் குடும்ப இல்ல விழா. அதனால் தான் எல்லோரும் வாழ்த்த வந்துள்ளோம், நான் மட்டுமல்ல எல்லோரும் அதே மன நிலையில் மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறோம். கேபி சங்கர் இல்ல விழா என்பதைவிட கேபிபி சாமி குடும்ப விழா என கூறலாம், ஏன் அதைவிட அவரது தந்தையார் மீசை பரசுராமன் இல்ல திருமண விழா என கூறலாம். இப்போதும் என் நினைவுக்கு வருகிறது, கம்பீரமாய் மீசையோடு அவர் இப்பகுதியில் மீனவ சமுதாய மக்களுக்கும் மற்ற சமுதாயத்தினருக்கும் பணியாற்றினார். மீசை பரசுராமன் என தலைவர் கலைஞர் தான் அவரை அழைத்தார். 

மேலும் படிக்க | விஜய் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் வர போகிறார் - கரூரில் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அப்டேட்

கழகத்திற்கு எந்த சோதனைகள் வந்தாலும் அந்த குடும்பம் எந்த காலத்திலும் மாறாமல் திமுகவிற்கு துணை நின்றது. 60 ஆண்டுகளாக அந்த குடும்பத்தோடு திமுகவிற்கு உறவு உண்டு. மிசாவில் பல்வேறு அடக்கு முறைகளை சந்தித்தவர் பரசுராமன். எந்த காலத்தில் தோளில் போட்டிருக்கும் துண்டை அவர் எடுக்கவில்லை, அவரது வழியில் அவரது மகன் கேபிபி சாமி, கேபி சங்கர் ஆகியோர் திமுகவில் பணியாற்றி வருகின்றனர். 2006ல் கேபிபி சாமிக்கு தலைவர் கலைஞர் சட்டமன்ற உறுப்பினராக்கி மீன்வளத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கினார். மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்களை இதன் மூலம் கொண்டு வந்தார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது சட்டமன்றத்தில் கேபிபி சாமி எழுந்தால் எதிரே உள்ள அதிமுகவினர் பயப்படுவார்கள். நாங்கள் தான் கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் சாமி என கூறுவோம். திருவொற்றியூர் தொகுதிக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் சாமி. வள்ளலார் நகரிலிருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் கொண்டு வர காரணமாக இருந்தவர். 

2014ல் ஆட்சி மாற்றம் ஆனபோது அந்த குடும்பம் பல சித்திரவதைக்கு ஆளாகினர். குடும்பத்தினர் பலர் கைது செய்யப்பட்டனர், மனைவி மகனை இழந்து தனது உடல் நிலையும் பாதிக்கப்பட்டு அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவரது வழியில் அவரிடம் பயின்ற கே பி சங்கர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். 2011ல் சங்கர் சிறையில் இருந்து மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 2021ல் அவருக்கு நாம் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு கொடுத்தோம். இன்று சிறப்பாக அவர் பணியாற்றி வருகிறார். கலைஞர் நூற்றாண்டு விழா கட்சி சார்பிலும் அரசு சார்பிலும் கொண்டாடி வருகிறோம். தனிப்பட்ட முறையில் கொண்டாடி வருகிறோம். நேற்று நாணயம் வெளியிட்டு விழா நடைபெற்றது. இப்படிப்பட்ட விழா எந்த தலைவருக்கும் இதுவரை நடந்தது இல்லை. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கிண்டியில் மருத்துவமனை மதுரையில் நூலகம், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம், மகளிர் உரிமை திட்டத்திற்கு கலைஞர் பெயர் என பல திட்டங்களை செய்துள்ளோம். 

மேலும் படிக்க | தவெக கட்சிக் கொடி ரெடி... எப்போது வெளியாகும்?!

அதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல நேற்றைய நிகழ்ச்சி நடந்துள்ளது. தற்போது நாணயம் அறிவாலயத்திற்கு வந்து விட்டது. 100 ரூபாய் நாணயத்தை 10,000 ரூபாய் கொடுத்து வாங்கி கொள்ளலாம். அதற்கு மதிப்பு இல்லை, இருப்பினும் நீங்கள் பத்தாயிரம் கொடுத்து அந்த நாணயங்களை வாங்கிச் செல்லலாம். ஒன்றிய அமைச்சர் கலைஞர் நினைவிடத்தை பார்க்க வேண்டும் என கூறி வந்து பார்த்தார். இதைப் போன்று நான் எங்கும் பார்த்ததில்லை என கூறினார். எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம் நேற்றைய கூட்டத்தில் அனைவரையும் எழுந்து நின்று கலைஞருக்கு மரியாதை செய்ய கூறினார். இதை நம்மால் மறக்க முடியுமா.. எனக்கு துக்கம் வந்தாலும் தூக்கம் வருவதில்லை, மகிழ்ச்சி வந்தாலும் தூக்கம் வருவதில்லை.  எண்ணி பார்க்கிறேன் கலைஞரைப் பற்றி இவ்வளவு புகழ்ந்து பேச வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. நமது கூட்டணி கட்சியும் அவர்கள் இல்லை, இருந்தாலும் அவர் உண்மையை பேசி உள்ளார். 

இதனால் ஒரு சிலருக்கு வயிற்றெரிச்சல் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் உள்ளார், நமக்கென வாய்த்துள்ளார். நாணயத்தில் இந்தி தான் உள்ளது தமிழ் இல்லையே என முழங்குகிறார். மத்திய அரசு வெளியிட்ட நாணயத்தில் எப்படி இருக்கும் என அவருக்கு தெரியுமா? இதற்கு முன்பு அண்ணாவுக்கு எம்ஜிஆர் க்கு நாணயம் வெளியிட்டார்கள். அதை இவர் பார்த்தது கூட இருக்க மாட்டார் இந்த ஆளெல்லாம் நமக்கு எதிர் கட்சி தலைவர் என உள்ளார். அண்ணாவின் கையெழுத்தை அந்த நாணயத்தில் வர வைத்தவர் கலைஞர். அதேபோல் தற்போது தமிழ் வெல்லும் என்று தலைவர் கலைஞரின் வார்த்தையுடன் நாணயம் வெளிவந்துள்ளது. ஏன் ராகுல் காந்தி அழைக்கவில்லை என கூறுகிறார், இது திமுக நடத்தும் விழா அல்ல ஒன்றிய அரசு விழா, அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு அவருக்கு அறிவு இல்லை. ஒன்றிய அரசு எம் ஜி ஆருக்கு விழா எடுத்தது  நாணயம் வெளியிட்டனர். ஆனால் அந்த நாணயத்தை வெளியிட்டது யார் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான்.

இவரை அவர்கள் முதல்வராகவே மதிக்கவில்லை ஏன் மனிதர்களாக கூட அவர்கள் நினைக்கவில்லை, வர மறுத்து விட்டார்கள். ஆனால் திமுகவில் அப்படி இல்லை நாம் கூப்பிட்டவுடன் 15 நிமிடங்கள் வாருங்கள் என்றோம் இல்லை இல்லை நீங்கள் எவ்வளவு நேரம் சொன்னாலும் அங்கே நிகழ்ச்சியில் இருக்கிறோம் என கூறினார்கள். இதுதான் திமுகவுக்கு பெருமை கலைஞருக்கு பெருமை. அம்மா அம்மா என சொல்லும் இவர்கள் தங்களது பாக்கெட்டில் படம் வைத்திருக்கும் இவர்கள் இதுவரை அந்த அம்மாவிற்கு ஒரு இரங்கல் கூட்டம் நடத்தியது உண்டா? இதுதான் இவர்கள் யோக்கியதை. கலைஞர் விழாவை பார்த்து பேசுவதற்கு இவருக்கு எந்த யோக்கியதையும் இல்லை. தற்போது பாஜகவுடன் திமுகவிற்கு கூட்டணி மீடியாக்கள் தீனி போட்டுக் கொண்டிருக்கிறார். நாங்கள் எப்போதும் ரகசிய உறவு வைப்பதில்லை, எதிர்த்தாலும் கொள்கையோடு எதிர்ப்போம் ஆதரித்தாலும் கொள்கையோடு தான் ஆதரிப்போம். நான் அண்ணா மீது ஆணையாக உறுதியாக மாநில உரிமையை எங்கும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். அப்படிப்பட்ட குணம்தான் திமுகவிற்கு உண்டு. கேபி சங்கர் கோபமானவர் என கூறினார்கள், கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும். எல்லோரும் சொல்கிறார்கள் என உங்கள் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம். கட்சிக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உங்கள் கோபம் வர வேண்டும். மணமக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயராக வையுங்கள் மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என பேசினார்.

மேலும் படிக்க | கிசுகிசு : நடிகரின் மாநாட்டுக்கு தொல்லை கொடுத்த 2 கேபினட்டுகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News