மீனவர் பலி: 3-வது நாளாக தொடரும் போராட்டம்

Last Updated : Mar 9, 2017, 11:03 AM IST
மீனவர் பலி: 3-வது நாளாக தொடரும் போராட்டம்  title=

கடந்த 6-ம் தேதி இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ (22) என்பவர் கழுத்தில் குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு பிரிட்ஜோ உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள், பிரிட்ஜோ உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும், தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் தங்கச்சிமடம் பகுதியில் அமைதியான முறையில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர் உயிரிழப்புக்குக் காரணமான இலங்கைக் கடற்படையினரைக் கைதுசெய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரை வெளியேற்ற வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கப்பட வேண்டும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மத்திய அமைச்சர்கள் நேரில் வந்து உறுதி தர வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவ, மாணவர்கள், பெண்கள் என பலரும் தங்கச்சி மடத்தில் திரண்டு வருகின்றனர். சென்னை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்ட களத்திற்கு வந்தனர். போராட்ட களத்திற்கு தொடர்ந்து பலரும் வந்த வண்ணமே இருப்பதால், அவர்களுக்கு தேவையான உணவுகளை மீனவ மக்களே சமைத்து அனைவருக்கும் வழங்கி வருகின்றனர்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் வந்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு உறுதி அளிக்காத வரை, போராட்டத்தை கைவிட மாட்டோம். பிரிஜ்ஜோவின் உடலையும் வாங்க மாட்டோம் என உறுதிப்பட தெரிவித்த மீனவர்கள், இன்று 3-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Trending News