அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துகளை சரிபார்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கல்விதுறையில் அதிகரித்து வரும் ஊழல் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துகளை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு  துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!

Updated: Apr 15, 2019, 08:24 PM IST
அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துகளை சரிபார்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கல்விதுறையில் அதிகரித்து வரும் ஊழல் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துகளை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு  துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகம் செய்து, 2018 அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த அன்னாள் என்ற அரசுப் பள்ளி ஆசிரியை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் விசாரித்து, ஏற்கனவே இந்த அரசாணையை எதிர்த்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகைப்பதிவை உறுதி செய்யவே பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அரசு பிறபித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள ஆசிரியர், எப்படி மாணவருக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியும் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் இந்த உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் நீதிபதி குறிப்பிட்டார். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால் தான் பயோமெட்ரிக் வருகைப்பதிவு என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து இந்த அரசாணையை விரைந்து அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, கல்வித்துறையில் ஊழல் அதிகரித்து வருவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சரிப்பார்க்க வேண்டும் எனவும், ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.