திருப்பதியில் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கண்டனம்

திருப்பதியில் தமிழக மாணவர்கள் மீதும், பொது மக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு இனவெறித்தாக்குதல் தொடுப்பதா? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 23, 2022, 04:30 PM IST
  • அண்டை மாநிலத்தவருக்கு தமிழர்கள் இளிச்சவாயர்களா?
  • நாம் தமிழர் கட்சியின் கண்டனம்
  • திருப்பதியில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் வலுக்கிறது
திருப்பதியில் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கண்டனம் title=

சென்னை: திருப்பதியில் தமிழக மாணவர்கள் மீதும், பொது மக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு இனவெறித்தாக்குதல் தொடுப்பதா? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம், திருப்பதி, எஸ்.ஆர்.புரம் வடமாலாபேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்களும், மக்களும் சுங்கச்சாவடி ஊழியர்களாலும், உள்ளூர் ஆட்களாலும் ஆயுதங்களைக் கொண்டு மிகக்கொடூரமான முறையில் தாக்கப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன் என்று அவர் வேதனை தெரிவித்தார்.

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை பழுதாக இருப்பதாகக்கூறி, அதற்குப் பதிலாக இரு மடங்கு சுங்கக்கட்டணத்தைப் பணமாக செலுத்தக்கூறியதை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காக தமிழர்களை இழிவாகப் பேசியும், தமிழக வாகனங்களை அடித்து உடைத்தும், பெண்கள், முதியவர்கள் எனப் பாராது தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஆந்திர சட்டக்கல்லூரிகளில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் மீது ஆயுதங்களைக் கொண்டு கோரத்தாக்குதலைத் தொடுத்ததுமான கொடுஞ்செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.

 

தமிழ்நாட்டுக்கு வரும் அண்டை மாநிலத்தவர்களை உரிய மரியாதையோடும், பெரும் மதிப்போடும் நடத்தி, அவர்களது பாதுகாப்பையும், நலவாழ்வையும் தமிழர்கள் உறுதிசெய்துள்ள நிலையில், அண்டை மாநிலங்களின் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு எப்போதும் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவது உள்ளக்கொதிப்பைத் தருகிறது. கேரளாவில் வழிபாட்டுக்குச் சென்ற சாந்தவேலு எனும் தமிழர், அந்நிலத்தில் வெந்நீர் ஊற்றிக் கொலைசெய்யப்பட்டதும், காவிரிச்சிக்கல் பேசுபொருளாகும்போதெல்லாம் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதும் வருத்தம் அளிக்கிறது.

ஆந்திரக்காட்டுக்குள் 20 தமிழர்களை அம்மாநிலக் காவல்துறை சுட்டுக்கொலை செய்ததுமான இனவெறிச்செயல்களின் நீட்சியாகவே, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும், மக்களும் தாக்கப்பட்ட இக்கொடுந்துயரம் அமைந்திருக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தமிழர்கள் நாங்கள் பெருத்த சனநாயகவாதிகள்; பெருந்தன்மையாளர்கள். ஆகவேதான், பெரும் அநீதிகள் இழைக்கப்பட்டபோதிலும் நாங்கள் அறவழியில் நீதிகேட்டு நிற்கிறோம் என்று நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகள் விடுமுறையா? அமைச்சர் சொல்வது என்ன

எங்களது சனநாயக உணர்வையும், பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் சாதகமாக்கிக் கொண்டு, இனியும் தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிடலாமென்று கணக்கிட்டால், அது பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரிக்கிறேன். எந்தவிதத் தவறும் இழைக்காத அப்பாவிகளை தமிழர்கள் என்கிற ஒற்றைக் காரணத்துக்காகவே இனவெறி கொண்டு தாக்கிய ஆந்திராவைச் சேர்ந்த கொடுங்கோலர்களின் கோரத்தாக்குதலுக்கு எனது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, தமிழக மாணவர்களும், மக்களும் தாக்கப்பட்ட இக்கொடுஞ்செயலுக்கு தனது கண்டனத்தைப் பதிவுசெய்வதோடு, தாக்குதல் தொடுத்த குண்டர்களை கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் கைதுசெய்ய ஆந்திர அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், ஆந்திராவிலுள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும் படிக்க | மா சே துங் போலவே கம்யூனிஸ்ட் கட்சியில் மூன்றாவது முறை பொதுச்செயலாளர் ஆனார் ஜி ஜிங்பிங்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News