மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வால், கல்வி என்பது திறமை சார்ந்தது என்ற நிலை மாறி பணம் சார்ந்தது என்ற நிலை உருவாகியுள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:-
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதி அளவீடாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு எத்தகைய பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்திவிடக் கூடாது என்று அஞ்சினோமா, அத்தகைய பாதிப்புகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளன. இதனால் கல்வி என்பது திறமை சார்ந்தது என்ற நிலை மாறி பணம் சார்ந்தது என்ற நிலை உருவாகியுள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நம்ப வைத்து கழுத்தை அறுத்ததாலும், இனி நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டதாலும் மருத்துவம் படிக்க விரும்பிய மாணவர், மாணவிகளிடையே தங்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியுமா? என்ற ஐயமும், அச்சமும் எழுந்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பள்ளிகளும், தனிப்பயிற்சி நிலையங்களும் கூட்டணி அமைத்து அமைத்து மாணவர்களிடம் கொள்ளை அடிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் புகழ்பெற்ற தனிப்பயிற்சி நிறுவனங்களாக விளம்பரப்படுத்தப்படும் தில்லியைச் சேர்ந்த ஃபிட்ஜீ (FIIT-JEE), இராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள ஆலென்(ALLEN), மத்தியப் பிரதேசத்தில் குவாலியர் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட பினாக்கிள் (PiNNACLE) ஆகிய நிறுவனங்கள் தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுடனும், சி.பி.எஸ்.இ பள்ளிகளுடன் கூட்டணி அமைத்து ஐ.ஐ.டி உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு, மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளன.
நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பது அந்த நிறுவனங்களின் பணி என்ற முறையில், அவை எங்கு வேண்டுமானாலும் கிளைகளை அமைத்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு பயிற்சி அளிக்கலாம். அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், இந்நிறுவனங்கள் அவ்வாறு பயிற்சி அளிக்காமல் தனியார் பள்ளிகளுடன் கூட்டணி அமைத்து, கிட்டத்தட்ட கட்டாயமாக பயிற்சியைத் திணிப்பது தான் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
நீட் தேர்வு, ஐஐடி நுழைவுத்தேர்வு ஆகியவற்றுக்கு 11-ம் வகுப்பில் தலா ரூ.1.46 லட்சமும், 12-ம் வகுப்பில் தலா ரூ.1.52 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் மேல்நிலை வகுப்புகளில் கல்விக் கட்டணம், தனிப் பயிற்சிக் கட்டணம் என ஒரு மாணவரிடமும் ரூ. 3 லட்சம் வரை பள்ளிகள் வசூலிக்கின்றன.
இதைவிடக் கொடுமை என்னவென்றால் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர இயலாத மாணவர்களிடம் காட்டப்படும் பாகுபாடு தான். தனிப்பயிற்சி வகுப்பு நடத்தப்படும் அனைத்து பள்ளிகளிலும் நுழைவுத்தேர்வு பயிற்சியில் சேர்ந்த மாணவர்கள் ஒரு வகுப்பாகவும், மற்றவர்கள் இன்னொரு வகுப்பாகவும் பிரிக்கப் படுகின்றனர். தனிப்பயிற்சி வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தும் நிர்வாகம், பயிற்சி வகுப்பில் சேராத மாணவர்களுக்கு சாதாரண ஆசிரியர்களைக் கொண்டு பாடங்களை நடத்துகிறது.
பயிற்சியில் சேராத மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தீண்டத்தகாத மாணவர்களாக நடத்தப்படுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களையும் பயிற்சி வகுப்பில் சேரச் செய்வதற்காக இத்தகைய வழிமுறைகளை தனியார் பள்ளிகள் கடைபிடிப்பது கண்டிக்கத்தக்கது.
பள்ளி நிர்வாகங்கள் காட்டும் பாகுபாடு காரணமாக மாணவர்களிடையே கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது. இது இன்னும் பல அனிதாக்களை உருவாக்கி விடுமோ? என்ற அச்சம் எழுகிறது. மாணவர்களின் திறன் சமச்சீராக அளவிடப்பட வேண்டும் என்பதற்காக நீட் தேர்வை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, மாணவர்களிடையே சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 85 லட்சம் ஆகும். இவர்களில் குறைந்தபட்சம் 10 லட்சம் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் சராசரியாக தலா ரூ. 1 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் வைத்துக் கொண்டால் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மட்டும் நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் ரூ.10,000 கோடி வருவாய் ஈட்டுகின்றன. இத்தகைய கொள்ளையை ஊக்குவிப்பதற்காகத் தான் நீட்டை மத்திய அரசு கொண்டு வந்ததாக பா.ம.க. குற்றஞ்சாற்றி வந்தது. இப்போது அது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பள்ளியும் தமிழக அரசின் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் தான் வசூலிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ரூ.3 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதும், பயிற்சியில் சேராத மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.
இதை மத்திய மாநில அரசுகளும், சி.பி.எஸ்.இ மற்றும் மெட்ரிகுலேசன் கல்வித்திட்ட இயக்குனரகமும் அனுமதிக்கக்கூடாது. இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இதற்கெல்லாம் மூல காரணமாக அமைந்துள்ள நீட் தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்களிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.