தமிழகத்தில் இங்கெல்லாம் கன மழை பெய்யக்கூடும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் அவ்வப்போது நல்ல மழை பெய்துகொண்டிருக்கின்றது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 11, 2020, 01:20 PM IST
தமிழகத்தில் இங்கெல்லாம் கன மழை பெய்யக்கூடும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
Zee Media

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பருவமழை (Monsoon) பெய்து வருகிறது. தமிழகத்திலும் அவ்வப்போது நல்ல மழை பெய்துகொண்டிருக்கின்றது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Centre) தெரிவித்துள்ளது. இது தவிர கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், ஆகிய

மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, கடலுர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கும் மேற்கூறிய வானிலை முன்னறிவிப்பையே வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தலைநகர் சென்னை (Chennai) மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாகவும் பதிவாகலாம்.

 வரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்கலாம் என்ற கணிப்பு இருப்பதால் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ: 2100-ல் உலக மக்கள் தொகையில் டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ!!

செப்டம்பர் 10ஆம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை, 45-55 கிலோமீட்டர் வேகத்தில் கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், செப்டம்பர் 10,11 ஆகிய தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்ற எச்சரிக்கையும் உள்ளது. ஆகையால் இந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். .

தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை அதாவது செப்டம்பர் 11, வெள்ளியன்று நள்ளிரவு வரை கடல் அலை 3.0 முதல் 3.9 மீட்டர் வரை எழும்பக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதை மனதில் வைத்துக்கொண்டு மக்கள் கடற்கரை அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் அடுத்த சில நாட்களுக்கு தமிழகம் முழுவதுமே பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

ALSO READ: இந்தியாவில் விரைவில் கிடைக்கும் COVID மருந்து: Reda-x-ஐ வெளியிடவுள்ளது Dr. Reddys