ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா முதலமைச்சராக முயற்சி எடுத்த சமயத்தில் தான், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றார். அதன்பிறகு தான் அதிமுக கட்சிக்குள் பல பிரச்சனைகள் வெடித்து தற்போது வரை நீடித்து வருகிறது. அதிமுகவுக்கு தலைமை ஏற்க சசிகலா ஒவ்வொரு முறையும் ஒரு படி எடுத்து வைக்க, அவரை உடனே கீழே தள்ள அனைத்து வேலைகளையும் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். இது போன்ற சூழலில் தான் தற்போது சசிகலா பாஜகவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன விவரம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜெயலலிதா மறைவு
2016-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததும், அதிமுக கட்சிக்கு பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் சசிகலா. தன்னுடையை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர் செல்வம். அதன்பிறகு அவசர அவசரமாக சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க அனைத்து வேலைகளும் நடைபெற்றது. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் திடீரென ஜெ நினைவிடத்தில் தர்மயுத்தம் செய்ய நிலைமையே தலைகீழானது. தன்னை வற்புறுத்தி ராஜினாமா செய்ய கையெழுத்து வாங்கியதாகவும், ஜெ மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியதை அடுத்து அனைவரது கோபமும் சசிகலா பக்கம் திரும்பியது. அதிமுகவும் பிரியத் தொடங்கியது. இது போன்ற குழலில் சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனையும் வெளியானது. அதில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது. அந்த நான்கு ஆண்டுகளில் அதிமுக கட்சி ஆட்டம் கண்டது.
தினகரனால் ஏற்பட்ட சிக்கல்
முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை கைகாட்டி விட்டு கட்சியையும், ஆட்சியையும் தினகரனிடம் ஒப்படைத்து சென்றார் சசிகலா. ஆனால் அடுத்தடுத்த நாட்களிலேயே தினகரனால் அதிமுக மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். பிறகு தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அதோடு ராயபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அவருடன் அதிமுகவினர் சிலர் பிரிந்து சென்றனர். ஓபிஎஸ் - இபிஎஸ் இரு துருவங்களாக மோதினர். ஆனால் அதன்பிறகு ஒருசில தலையீட்டால் அவர்கள் இணைந்தார்கள். ஆனாலும் 4 ஆண்டு கால ஆட்சி முழுவதும் பனிப்போர் அவர்களுக்குள் தொடர்ந்து அனைவரும் அறிந்ததே.
சசிகலா ரிலீசும் ஏக்கமும்
4 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்து பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலாவுக்கு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக கட்சிக்குள் அவர் தலைமை ஏற்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் சசிகலா மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சிறைக்கு செல்லும் முன்பு வரை நெருக்கம் காட்டிய இபிஎஸ் பகையாளியாக மாறி இருந்தார். ஓபிஎஸ் மறைமுகமாக தனது ஆதரவை சசிகலாவுக்கு தெரிவித்தார். அதற்கும் காரணம் இருந்தது. சசிகலா வருகை உறுதியானதும் பொதுச்செயலாளராக பதவியேற்க இபிஎஸ் முழு முயற்சியும் எடுத்தார். உடனே ஓபிஎஸ் சசிகலாவுடன் இணையும் முயற்சியில் இறங்க பதறிவிட்டார் இபிஎஸ். அதன்பிறகு செயற்குழு கூடியது. இபிஎஸ்-ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளராக தேர்வானார்கள். ஆனாலும் தற்போது வரை தனித்தனியாக தான் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் சகோதரர் ஓ.பி.ராஜா சசிகலாவை சந்திக்க, அதிமுகவுக்குள் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. ஓபிஎஸ்-சசிகலா சந்திக்க உள்ளதாக அவர் கூறினார். ஆனால் அடுத்த நாளே ஓ.பி.ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு; ரெய்டு எங்கெங்கே
இதுவரை மூன்று முறைக்கு மேல் இதேபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இபிஎஸ் உடன் மனஸ்தாபம் ஏற்பட்டால் உடனே ஓபிஎஸ் இப்படி ஒரு யுக்தியை கையாள்வதாக அதிமுக ஆதரவாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இந்த முறையும் தலைமை ஏற்கும் கனவு காலியாக, சசிகலா இப்போது சூப்பர் பிளான் ஒன்றை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஓபிஎஸ் மகனும், எம்.பி.யுமான ரவீந்திரநாத் உதவியுடன் டெல்லிக்கு தூது அனுப்பியுள்ளாராம். ஏற்கனவே அண்ணாமலை சமீபத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து சொல்லி இருந்த நிலையில், பாஜக உதவியுடன் அதிமுக-வை கைப்பற்ற சசிகலா முடிவெடுத்துள்ளதாக பேசப்படுகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியாகவே போட்டியிட்டனர். இதனால் இபிஎஸ் மீது பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியை பலப்படுத்துவேன் என சசிகலா வாக்குறுதி கொடுத்தால் அதிமுகவுக்குள் அவர் அடி எடுத்து வைக்க டெல்லி பச்சைக்கொடி காட்டும் என்று கணிக்கப்படுகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR