மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு - சீமான் கண்டனம்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை திருமப்ப் பெற வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 30, 2022, 05:07 PM IST
  • மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
  • தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்தது
  • அந்த அறிவிப்பை திரும்பப் பெற சீமான் வலியுறுத்தல்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு - சீமான் கண்டனம் title=

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கும், குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளனர். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினைப்போல திமுக அரசும் மக்களின் தகவல்களை ஒவ்வொன்றாக ஆதார் எண்ணுடன் இணைக்க கட்டாயப்படுத்துவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் மின்நுகர்வோராக உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இணைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும். 100 மின் அலகுகள் வரை இலவச மின்சாரம் பெறும் வாடிக்கையாளர்களைக் கணக்கெடுக்கவே, ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு கூறும் காரணம் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அப்படியென்றால் இதுநாள் வரையில் யாருக்கு வழங்குகிறோம் எனத் தெரியாமலேயே தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரம் வழங்கியதா? என்ற கேள்வியும் எழுகிறது.

மேலும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணையும் குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளதால், அவர்கள் வீடு மாறும்போது மீண்டும் இணைப்பு எண்ணை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமே? அப்படியானால் ஒவ்வொரு முறையும் வீடு மாற்றி, வேறு வீடு தேடி அலையும்போது, ஆதார் அட்டையில் மின் இணைப்பு எண்ணை மாற்றவும் அலையவேண்டுமா? வாடகைதாரர்களின் ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதால், எதிர்காலத்தில் வீடு வாடகைதாரர்களுக்கே சொந்தமானதற்கான ஆதாரமாக முறைகேடாகப் பயன்படுத்தப்படுமோ என்ற வீட்டு உரிமையாளர்களின் அச்சமும் நியாயமானதே. இந்த கேள்விகளுக்கெல்லாம் திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது? வாடகை குடியிருப்புகளுக்கு இனி வணிக மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பால், வாடகை வீட்டில் குடியிருப்போர் மேலும் அதிக பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளாவார்கள். வாடகை செலுத்தவே சிரமப்படும் ஏழை, நடுத்தர மக்களால், பல மடங்கு அதிகரித்துள்ள மின் கட்டணத்தை எப்படி செலுத்த முடியும்?

மேலும் படிக்க | டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை - முதலமைச்சர் அறிவிப்பு

ஏற்கனவே, இந்திய ஒன்றிய அரசால் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் புகைப்படம், முகவரி, கைபேசி எண், கைரேகை, கருவிழித்திரை மட்டுமின்றி வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு அட்டை, வருமானவரி அட்டை, குடும்ப அட்டை, சமையல் எரிகாற்று அட்டை, முதியோர் ஓய்வூதியம், கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் ஆதார் அட்டையுடன் இணைப்பதற்காக அப்பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களிடம் மொத்தமாக கையளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் குடிமக்களின் அனைத்து தகவல்களும் திருடப்படக்கூடிய பேராபத்து உள்ளதால், தனிமனித சுதந்திரம் என்பது இந்திய நாட்டில் முற்றாகக் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினைப் பின்பற்றி, தற்போது திமுக அரசும் தமிழ்நாட்டு மக்களின் தகவல்களை ஒவ்வொன்றாக ஆதார் எண்ணுடன் இணைக்க வற்புறுத்துவது அதன் எதேச்சதிகாரப் போக்கினையே வெளிப்படுத்துகிறது. குறிப்பாக மின் இணைப்பு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்பது கொடுங்கோன்மையாகும். ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் அனைத்தும் தனி மனித அந்தரங்கம் மற்றும் அடிப்படை மனித உரிமை சார்ந்தவையே என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று அளித்த தீர்ப்பில் உறுதி செய்துள்ள நிலையில், மேலும் மேலும் அதில் கூடுதல் தகவல்களை இணைக்க இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் வற்புறுத்துவதென்பது அடிப்படை மனித உரிமைக்கே எதிரானதேயாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு அனைத்து மின்நுகர்வோரும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டுமென்ற உத்தரவினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News