சட்டப்பேரவை வைர விழாவில் மதவாத கட்சிகளை அழைக்க மாட்டோம் என்று திமுக சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது, திமுகவிடம் அரசியல் நாகரிகம் கிடையாது. கருணாநிதியை வைத்து குறுகிய அரசியலை நடத்துகிறது திமுக. கருணாநிதியின் வைரவிழாவிற்கு அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டும். பாஜக மதவாத கட்சி என்று திமுகவினர் பரப்பி வருகிறார்கள். பாஜக மதவாத கட்சி என்றால் வாஜ்பாய் தலைமையிலான அரசில் ஏன் திமுக கூட்டணி வைத்தது? அப்போது பாஜக மதவாத கட்சி என்பது தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழக அரசு தண்ணீர் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும். ஊழலற்ற ஆட்சியை பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே தர முடியும் எனக் கூறினார்.
சென்னையில் ஜூன் 3-ம் தேதி நடைபெறவுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டப் பேரவை வைர விழாவில் சோனியா காந்தி, நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.