சென்னையில் பேனர் விழுந்ததால் உயிரிழந்த சுபஸ்ரீயின் உடளுக்கு பிரேத பரிசோதனை!!
சென்னையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் இன்ஜினியர் மீது விழுந்துள்ளது. இதில் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்துள்ளார். இதனால் அவரது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது. உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
IT நிறுவனத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ, நேற்று பிற்பகல் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியது இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறும்போது, அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த அந்த பெண், விபத்தின் போது தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார் என்று கூறினார். அதிமுக பிரமுகரான ஜெயகோபால், தனது மகன் திருமணத்திற்காக மீடியனில் வைக்கப்பட்டிருந்த அந்த பேனரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் படங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த திருமண விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
இதுகுறித்து சென்னை தெற்கு இணை காவல் ஆணையர் மகேஸ்வரி என்டிடிவியிடம் கூறும்போது, அந்த பேனர்கள் அங்கீகரிக்கப்படாதவை. அதனை வைத்தவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த தண்ணீர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் மீது வேகமாக வாகனத்தை ஒட்டுதல், தனிநபர் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துதல், அலட்சியம் காரணமாக உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று அவர் கூறினார். இதுகுறித்து மற்றொரு போலீசார் கூறும்போது, அதிமுக பிரமுகர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது உறுதிப்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கோவையில் MGR நூற்றாண்டு விழாவுக்காக, அனுமதியின்றி வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி, இளைஞர் ரகு உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.