சிந்துபாத்தை போல யார் தோள் மீதாவது ஏறி சவாரி செய்வதே காங்கிரஸில் வழக்கம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தண்ணீர் தட்டுப்பாட்டை சீர் செய்ய முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து கோயில்களிலும் அதிமுகவினர் மழை வேண்டி சிறப்பு யாகம் செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து, சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், யாகம் நடத்தினால் மழை பொழியும் என்பது நம்பிக்கை, ஆதலால் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கோயில்களில் யாகம் நடத்தப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் தற்போது உணர்ந்திருப்பர். ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் அது 10 பேருக்கு ஆக்சிஜன் தரும், இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை.
தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை தவிர வேறு யார் அதிமுகவிற்கு வந்தாலும் வரவேற்போம். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொள்கை அடிப்படையில் அதிமுக ஆதரவு அளிக்கிறது, நடைமுறை சிக்கல்களை தீர்த்த பிறகு அதனை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்வோம் என அவர் தெரிவித்தார்.