தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!
சேலத்தில் இன்று கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் உள்ள 9 இடங்கள் கொரோனா தடுப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு வளையங்களில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக செய்தியாளர்களிடம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் முதலமைச்சர் கூறியதாவது.... "பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் தங்கள் துறைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்தக் கூட்டத்தில் தெளிவாக கூறியுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சிறப்பான முறைகளை மேற்கொண்டு வருகிறார். சேலம் மாவட்டத்தில் உள்ள சுமார் 9 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கபட்டுள்ளது. அதில், 4 மாநகராட்சி பகுதிகள், 5 புறநகர் பகுதிகளும் அடங்கும். இந்த பகுதிகளில் சுமார் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் குணமடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
மாவட்டம் முழுவதிலும் சமூக இடைவெளியை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது. அனைத்து மக்களும் முகக் கவசங்கள் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுள்ளது. நியாயவிலை கடைகளில் பொருட்கள் மக்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும். சேலம் மாவட்டத்தில் 85 சதவீதத்திற்கும் மேலாக அத்தியாவசியப் பொருட்கள் நியாயவிலை கடைகள் மூலமாக வழங்கப்பட்டுகிறது. அதில், 95% அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இன்னும் 3 நாட்களில் அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 5 நாட்களுக்குள் நிவாரணப் பொருட்கள் கிடைத்துவிடும். சேலம் மாவட்டத்தில் அம்மா உணவகத்தின் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 11 ஆயிரத்து 500 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 15 அம்மா உணவகங்கள் செயல்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சுமார் 78 பெரிய மளிகைக்கடைகள் மூலம் மளிகைப் பொருட்கள் அனைத்தும் நேரடியாக வீட்டுக்கே டெலிவரி செய்யப்படுகின்றன. இதற்காக சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார், 150 நடமாடும் வாகனங்கள் மூலமாக சேலம் மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது.
எந்தெந்தத் தொழில்கள் மீண்டும் இயங்கலாம் என்பது குறித்த விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்படும். கரும்பு பயிரிட்ட விவசாயிகளை காப்பாற்றும் விதமாக, சர்க்கரை தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பழனிசாமி தெரிவித்தார்.