மதுரை: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் விவகாரம் குறித்து சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை வரும் டிசம்பர் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி 100_வது நாளாக போராட்டம் நடைபெற்றது. அதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அதனை மீறி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து வழக்குகளை சிபிஐ விசாரித்தால் சரியாக இருக்கும் என்று கோரிக்கை வைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமான 222 வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ தரப்பில் மேலும் கால அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும் எவ்வளவு கால அவகாசம் வேண்டும் எனக் கேள்வி எழுப்பியது. அதற்கு சிபிஐ தரப்பில் 2 மாத காலம் அவகாசம் வேண்டும் எனக்கூறியது.
பின்னர், இதுவரை துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மேலும் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் தினத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.