தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணாமகவும், ஏற்கெனவே தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திரிபுவனத்தில் தலா 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதேப்போல் கரூர் நகர் பகுதியில் தலா 7 செ.மீ. மழையும், பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அரிமளம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 5செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.