விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!!

அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!

Last Updated : Mar 15, 2019, 02:07 PM IST
விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!! title=

அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!

ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கடைகளை உடனடியாக அகற்றிட வேண்டும் என தமிழக அரசுக்கு விடக்கோரியும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதே மனுவில், இந்த டாஸ்மாக் கடை உள்ள இடத்துக்கு அருகே விவசாயம் நடைபெறுவதாகவும், இந்த வழியாக செல்லும் சாலையைதான் மாணவர்களும் பயன்படுத்துகின்றனர் எனவும் நல்லசாமி குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த இந்த மதுபானக்கடையை திடீரென கடந்த டிசம்பர் மாதம் விவசாய நிலத்தில் அமைத்துள்ளதால் அதை அகற்ற உத்தரவிடுமாறு கோரியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, தமிழகம் முழுவதும் கிராமபுரங்களில் செயல்படும் 2728 டாஸ்மாக் கடைகளில் விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் எத்தனை? என விளக்கமளிக்க கடந்த விசாரணையில் உத்தரவிட்டுருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் எத்தனை? என விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மது அருந்துவதை தடுக்க ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஏன் சிசிடிவி கேமிராக்களை பொருத்தக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் செயல்படும் மூன்றாயிரம் டாஸ்மாக் கடைகளில் தற்போது சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள கடைகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பதிலளித்தார். மேலும் 110 கடைகள் விவசாய நிலங்களில் திட்ட அனுமதி பெறாமல் செயல்படுவதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளதாகக் கூறினர். அதனால் திட்ட அனுமதி இல்லாமல் விவசாய நிலத்தில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டனர். மதுக்கடைகளை மூடியதற்கான அறிக்கையை வரும் திங்களன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

Trending News