சென்னை: சென்னையை கடந்த 12-ம் தேதி வார்தா புயல் தாக்கியதால் சென்னையில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின்கம்பங்களும் சாய்ந்தன.
இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
புயல் நிவாரண பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சாய்ந்து கிடக்கும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியும், மின்கம்பங்களை சரி செய்து மின்சார வினியோகத்தை சீர்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் சுமார் 30 சதவீத பகுதிகள் மின் வினியோகத்தைப் பெற்றன.நேற்று மேலும் 30 சதவீத பகுதிகளில் மின்சாரம் சீரானது.
சென்னை புறநகர் பகுதிகளில்தான் அதிக மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க மின் வாரிய அதிகாரிகள் முன்னுரிமை கொடுத்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 90 சதவீதம் இடங்களில் மின்வினியோகம் இயல்பு நிலைக்கு வந்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.