விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை; முயற்சிகள் தொடர்கிறது: இஸ்ரோ

விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 10, 2019, 10:57 AM IST
விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை; முயற்சிகள் தொடர்கிறது: இஸ்ரோ
Pic Courtesy: twitter/@isro

புதுடெல்லி: நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் குறித்து கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அதிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கி.மீ தொலைவில் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நெருங்கி வந்த நிலையில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனினும் சந்திரயான்-2 -வின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு நிலவை ஆய்வு செய்து வருகிறது. மேலும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டறியப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என சிவன் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அதிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. லேண்டருடன் தொடர்பு கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனப் பதிவிட்டுள்ளது. 

 

முன்னதாக ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2. படிப்படியாக பல சுற்றுப்பாதைகளை கடந்து சந்திரயான் 2-விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இறங்க செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1:55 மணி அளவில் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க ஆயுத்தம் ஆனது. ஆனால் நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கி.மீ தொலைவில் விக்ரம் லேண்டர் நெருங்கி வந்த நிலையில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.