இதுவரை 30 கோடி பான் கார்டு ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது என்கிறார் அனுராக் தாக்கூர்

ஜனவரி 27, 2020 நிலவரப்படி, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள பான் கார்டு 30,75,02,824 என்று தாக்கூர் மக்களவையில் தெரிவித்தார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 3, 2020, 04:39 PM IST
இதுவரை 30 கோடி பான் கார்டு ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது என்கிறார் அனுராக் தாக்கூர் title=

புதுடெல்லி: பான் உடன் ஆதார் இணைக்கும் தேதி மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 30 கோடிக்கு மேற்பட்ட பான் கார்டு எண்களை தனித்துவமான அடையாளக் குறியீட்டுடன் (ஆதார் அட்டை) அரசாங்கம் இணைத்துள்ளது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர்  அனுராக் சிங் தாக்கூர் திங்களன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதாவது ஜனவரி 27, 2020 நிலவரப்படி, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொத்த நிரந்தர கணக்கு எண்கள் (பான்) 30,75,02,824 என்று தாக்கூர் மக்களவையில் தெரிவித்தார். 

பான் உடன் ஆதார் இணைக்க வேண்டிய தேதி 2019 டிசம்பர் 31 முதல் 2020 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் உரையுடன் தொடங்கியது. இதன் பின்னர் அடுத்த நாள் சனிக்கிழமை அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், பாராளுமன்ற நடவடிக்கைகளின் முதல் நாள் இன்று கூடியது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், "துப்பாக்கிச் சூட்டை நிறுத்துங்கள், நாட்டை உடைப்பதை நிறுத்துங்கள்' என்ற முழக்கங்களை எழுப்பினர். அதேபோல சிஏஏ மற்றும் என்.ஆர்.சி சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிகை வைத்து கோஷம் எழுப்பினார்கள். மக்களவையின் மையத்தில் குறைந்தது 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக கூடி பலகைகளை அசைத்து, "வெட்கம், வெட்கம்" என்று கூச்சலிட்டனர்.

அதாவது முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், "துரோகிகளை தோட்டாவால் சுட்டு தள்ளுங்கள்" என முழக்கத்தை முன் வைத்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்த பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா உள்பட வேறு சில பாஜ தலைவர்களும் அனுராக் தாக்கூர் போலவே, கோஷம் போட, கூட்டமும் அதேபோல திருப்பிக் கூறியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது. 

இந்த விவகராம் பெரும் சர்ச்சை ஆனதால், நட்சத்திர தேர்தல் பிரச்சார பட்டியலில் இருந்து அனுராக், பிரவேஷ் போன்றவர்களை கட்சி நீக்கியது. அதுமட்டுமில்லாமல் அவர்களை தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News