கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு -தமிழக அரசு

நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோடை காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 18, 2018, 06:58 PM IST
கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு -தமிழக அரசு  title=

நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோடை காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. 

அதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டதாவது:-

மே மற்றும் ஜூன் மாதங்களில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகிக்கும் பொருட்டு, ஊரக பகுதிகளுக்காக ரூ.50 கோடியும், நகராட்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்காக ரூ.120 கோடியும், பேரூராட்சிகளுக்காக ரூ.14 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்காக ரூ.16 கோடியும் என மொத்தம் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மழைநீர் சேமிப்பு தொடர்பாகவும், கழிவுநீரை சுத்திகரித்து நல்ல நீராக மாற்றி அதை பயன்படுத்துவது தொடர்பாகவும் திட்டங்களை தீட்டவும் உத்தரவிட்டார். 

சென்னை மாநகரை பொறுத்தவரை, குழாய்கள் மூலம் தண்ணீர் செல்லாத இடங்களுக்கு தண்ணீர் வழங்க ஏதுவாக, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் மூலம் புதிய திட்டம் தீட்டவும், பிரதம மந்திரியின் “பசல் பீமா யோஜனா திட்டம்” தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பெற்றுத் தரவும் உத்தரவிட்டார்.

அரசு செயலாளர் அந்தஸ்தில் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது மாவட்டங்களுக்கு வரும் வாரத்தில் நேரடியாக சென்று குடிநீர் விநியோக நிலையினை கண்காணித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார். 

இந்த கூட்டத்தில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். 

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Trending News