இஸ்ரேலில் வலுக்கும் போராட்டம்... சர்ச்சைக்குரிய நீதித்துறை சீர்திருத்த சட்டம் ஒத்திவைப்பு!

Israeli PM Benjamin Netanyahu: இஸ்ரேலில் நிலவும் கடும் எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு, சர்ச்சைக்குரிய நீதித்துறை சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒத்தி வைத்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 28, 2023, 01:59 PM IST
  • சர்ச்சைக்குரிய நீதித்துறை சீர்திருத்த சட்டம் இஸ்ரேலில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • இஸ்ரேலில் சட்டத்திற்கு எதிராக பரவலான போராட்டங்கள்.
  • நாட்டின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என இஸ்ரேலிய மக்கள் நம்புகின்றனர்.
இஸ்ரேலில் வலுக்கும் போராட்டம்... சர்ச்சைக்குரிய நீதித்துறை சீர்திருத்த சட்டம் ஒத்திவைப்பு! title=

டெல் அவிவ்: இஸ்ரேலில் நிலவும் கடும் எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு, சர்ச்சைக்குரிய நீதித்துறை சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒத்தி வைத்துள்ளார். இந்த சட்டத்தை ஒத்திவைக்க நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஓட்ஸ்மா யெஹுடிட் கூறியுள்ளது. ஓட்ஸ்மா யெஹுடிட் (Otzma Yehudit) என்பது இஸ்ரேலிய அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர் (இடாமர் பென் க்விர் (Itamar Ben Gvir) என்பவரின் கட்சியாகும்.  நீதிமன்ற சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்ரேலில் பல வாரங்களாக கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இஸ்ரேலிய தொழிலாளர் அமைப்புகளும் இதில் சேர்ந்தன.

நீதித்துறையில் அரசு அதிகாரம்

நீதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ முடிவு செய்து, அதன் கீழ் உச்சநீதிமன்றத்திற்கான அதிகாரம் குறைக்கப்படும் எனவும், அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் நியமனத்தில் அரசு முடிவெடுக்கும் எனவும் கூறப்பட்டது. இதனால், நீதித்துறையில் அரசு அதிகாரம் செலுத்தக்கூடும் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி முடக்கப் போராட்டம்

நீதித்துறை தொடர்பாக அரசாங்கம் செய்துவரும் மாற்றங்கள் நாட்டின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என இஸ்ரேலிய மக்கள் நம்புகின்றனர். இதை எதிர்ப்பவர்களில், நெதன்யாகுவின் தீவிர ஆதரவாளர்களும் அடங்குவர் என்பது முக்கிய விஷயம். இந்த சட்டத்தின் கீழ் அரசாங்கம் நீதித்துறையை பலவீனப்படுத்த விரும்புவதாக மக்கள் நம்புகின்றனர். பிரதமர் நெதன்யாகு மீது பல்வேறு ஊழல் வழக்குகள் இருப்பதால், இந்த சட்டம் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் என்றும் மக்கள் கூறுகின்றனர்.  எனவே நாட்டின் ஜனநாயக மாண்புகளை பிரதமர் குலைப்பதாகக் குற்றம்சாட்டி, பொது மக்களும் போராட்டத்தில் குதித்தனர். ஜனவரி மாதம் தொடங்கிய போராட்டம், சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று பணி முடக்கப் போராட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க | கலிபோர்னியா குருத்வாராவில் துப்பாக்கி சூடு! இருவர் படுகாயம்! 

நெதன்யாகு அரசாங்கம் கொண்டு வந்த சட்டம்

இஸ்ரேலின் நெதன்யாகு அரசாங்கத்தால் இயற்றப்பட்ட புதிய சட்டம், நீதிமன்றத்தின் அதிகாரத்தை கணிசமாகக் குறைக்கும். அதன் படி, இஸ்ரேலிய நீதிமன்றங்கள் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மறுபரிசீலனை செய்ய முடியாது அல்லது அவற்றை நிராகரிக்கவும் முடியாது. இதுமட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தின் மூலம் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்ற முடியும். அப்படிப்பட்ட நிலையில், நெதன்யாகு விரும்பினால், நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவுக்கு பெரும்பான்மை உள்ள நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் எடுக்கலாம். அரசின் ஒப்புதலுக்குப் பிறகுதான் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிபதிகளை நியமிக்க முடியும். அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பின்பற்றுவது அமைச்சர்களுக்கு இனி கட்டாயமாக இருக்காது. 

வலுவடைந்த போராட்டம்

புதிதாக கொண்டு வரப்பட்டு நீதிமன்ற சீர்திருத்த சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றம் அருகே சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இதனால், அதிபர் ஐசக் ஹர்சாக் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் பிரதமர் பெஞ்சமின் நெத்தென்யாஹுவுக்கு நெருக்கடி அதிகரித்தது. இதையடுத்து, நீதித்துறை சீரமைப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதை ஒத்திவைப்பதாக பெஞ்சமின் நெத்தன்யாஹூ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்திய வம்சாவளி சிறுமி கொலை வழக்கு! 35 வயது நபருக்கு 100 ஆண்டுகள் கடுங்காவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News