இத்தாலி: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக புதிதாக 345 இறப்புகள் ஏற்பட்டதாக இத்தாலி தெரிவித்துள்ளது. இதன் மொத்த இறப்பு எண்ணிக்கை 2,503 ஆக உள்ளது. இது ஒரே நாளில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 21,980 இலிருந்து 12.6 சதவீதம் அதிகரித்து இத்தாலியில் மொத்த Coronavirus பாதிப்பு எண்ணிக்கை 31,506 ஆக உயர்ந்தது.
இந்த நாட்டில் பிப்ரவரி 21 அன்று கொரோனோ தொற்று இருப்பது வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து மிக மெதுவாக அதிகரித்து, தற்போது அபாயகரமான அளவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி தான் முதலிடத்தில் உள்ளது.
உலகளவில், இந்த வைரஸ் காரணமாக 184,976 பேருக்கு தொற்றுநோய் ஏற்பட்டு உள்ளது என்றும், 7,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அளித்த தரவுகளின்படி, கிட்டத்தட்ட 80,000 பேர் தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
துருக்கியின் சுகாதார மந்திரி பஹ்ரெடின் கோகா, கொரோனா வைரஸ் காரணமாக 89 வயதான நோயாளி இறந்துள்ளதாகவும், நாட்டின் முதல் மரணம் இது என உறுதிப்படுத்தினார்.
புதிதாக 51 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 98 ஆக இருப்பதாகவும் கோகா செய்தியாளர்களிடம் கூறினார்.
காம்பியா நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் பாதிப்பால் 20 வயது பெண் மரணம் அடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அந்தநாட்டின் முதல் மரணம் ஆகும்.