சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் இருவர் வழிபாடு நடத்தியதை கண்டித்து, கேரளாவில் பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தின் காரணாமாக வெடித்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 750-க்கும் மேற்பட்டோரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்தது. மேலும் இம்மாதம் 22-ஆம் நாள் முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் வரும் ஜனவரி 14-ஆம் நாள் மகரஜோதி தரிசனம் நடைபெறுவுள்ள நிலையில் கடந்த டிசம்பர் 30-ஆம் நாள் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. வரும் ஜனவரி 19-ஆம் நாள் வரை நடை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மகர விளக்கு பூஜைக்காக தற்போது சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் கடத்ம ஜனவரி 2-ஆம் நாள் கனகதுர்கா(44), பிந்து(42) என்னும் இரு பெண்கள் சபரிமலை கோவில் உள் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. சம்பவநாள் அன்று காலை சுமார் 3.45 மணிக்கு அவர்கள் தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சபரிமலை நடை சுமார் 1 மணிநேரம் அடைக்கப்பட்டு சிறப்பு பரிகார பூஜை நடைப்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபரிமலையில் பெண்களை அனுமதித்தை கண்டித்து, சபரிமலை கர்ம சமிதி என்ற அமைப்பு சார்பில், கேரள மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. போராட்டத்தின்போது, சாலைகளில் ஊர்வலமாக வந்த பாஜகவினரை, கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழிமறித்துத் தாக்கினர். இதனால், பல இடங்களில் வன்முறை வெடித்தது.
வன்முறையைத் தொடர்ந்து, மலப்புரம் தவலூரில், உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு தீ மூட்டப்பட்டது. இதேபோல், கொட்டாரக்கரையில், பாஜக - மார்க்சிஸ்ட் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. நெடுமங்காடு காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். இதேபோல், பாலக்காட்டிலும் பதட்டமான சூழல் நிலவியது. மேலும், பாலக்காட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்தனர். இந்நிலையில் பாலக்காட்டில், மாலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக தொண்டர்கள் நேருக்கு நேர் கல்வீச்சில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் ஏற்பட்ட பதற்றத்திற்கு காரணமாக போராட்டகாரர்களை காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்தனர்.
அந்த வகையில் மாநிலம் முழவதும் 750-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போராட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 21 காவலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 35 வீடுகள், அலுவலகங்கள் சேதமடைந்துள்ளது, அனைத்து பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டன, பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
தற்போது நிலைமை ஓரளவு சீராகி, பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. இதற்கிடையில் கேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அளிக்க முதல்வர் பினராயி விஜயனுக்கு, ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.