இந்தியாவுடன் ஆரோக்கியமான உறவு வேண்டுமென்றால் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை வைத்துள்ளது!
காஷ்மீரின் புலவாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இருநாடுகளுக்கு இடையே ஒரு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் வற்புறுத்தலை தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள, இந்தியாவில் தேடப்படும் நபர்களை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறியுள்ளது.
மேலும் இந்தியாவுடனான ஆரோக்கியமான உறவு தொடர வேண்டும் என்றால், பாகிஸ்தான் பொறுப்புணர்வை நிரூபிக்க அந்நாட்டில் தங்கியுள்ள தேடப்படும் இந்தியர்களான தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை ஒப்படைக்க வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்தால் இந்த இந்திய நபர்களை விரைவாக ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
தற்போதைக்கை பாகிஸ்தானில் இருந்து இந்தியா எதிர்பார்ப்பது இது ஒன்று தான். இவர்கள் இந்தியாவில் தேடப்படுபவர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள் ஆவர்.
தாவூத் இப்ராகிம் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர். ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தலைவரான சையது சலாவுதீன் என்கிற முகமது யூசுப் ஷா அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் ஆவார்.