இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, தடுப்பூசி போடும் பணியும் தீவிரமடைந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறையுடன் மாநிலங்கள் போராடி வரும் நிலையில், நம்பிக்கை ஊட்டும் செய்தியாக, ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில், அந்த ஐந்து மாத காலகட்டத்தில், இருநூறு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் நாட்டில் கிடைக்கும் என்று மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. இது நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ள 216 கோடி தடுப்பூசிகளில் நமக்கு 8 வகையான தடுப்பூசிகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த 8 வகை தடுப்பூசிகளும் இந்த ஆண்டே பயன்பாட்டிற்கு வந்து விடும் எனவும் கூறப்படுகிறது.
இதில், கோவேக்சின்- 55 கோடி, கோவிஷீல்டு - 75 கோடி, நோவாவேக்ஸ் - 20 கோடி, பயாலஜிக்கல் இ- 30 கோடி, ஜைடஸ் கேடிலா டி.என்.ஏ- 5 கோடி, பாரத் பயோ டெக்கின் மூக்கு வழி செலுத்தும் ஸ்ப்ரே தடுப்பூசி- 10 கோடி, ஜெனோவா mRNA - 6 கோடி, ஸ்புட்னிக்-வி 15.6 கோடி என, ஆக மொத்தம் 216.6 கோடி தடுப்பூசி இந்தியாவிற்கு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
8 தடுப்பூசிகள் விவரம்
1. கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் (SII) தயாரிக்கிறது. இந்த தடுப்பூசி தான் இப்போது பெருமளவில் போடப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசி கிட்டத்தட்ட 90 சதவீத செயல்திறனைக்கொண்டுள்ளது என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
2. கோவேக்சின் (Covaxin) தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்போது பெருமளவில் போடப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசி கிட்டத்தட்ட 90 சதவீத செயல்திறனைக்கொண்டுள்ளது என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது தற்போது பயன்பாட்டில் உள்ளது.
3. ஸ்புட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசியை ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. இந்தியாவில் அவசர பயன்பாட்டு ஒப்புதல் பெற்றுள்ள 3-வது தடுப்பூசி ஆகும். ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்படு வரும் போதிலும், பின்னர் ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் தயாரித்து வழங்க போகிறது. இந்தத் தடுப்பூசி கிட்டத்தட்ட 90 சதவீத செயல்திறனைக்கொண்டுள்ளது என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
4. பாரத் பயோ டெக் நிறுவனம் மூக்குவழியே செலுத்தும் தடுப்பூசியை உருவாக்கி தயாரித்து வருகிறது. இது தற்போது முதல் கட்ட பரிசோதனை நிலையில் உள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற தடுப்பூசியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
5. நோவாவேக்ஸ் தடுப்பூசியை அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியையும் இந்தியாவில் புனேயின் இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும். இந்தியாவில் இதன் பெயர் கோவோவேக்ஸ் என அறியப்படுகிறது. இதுவும் பரிசோதனை கட்டத்தில் உள்ளது
6. ஜைடஸ் கேடிலா (Zydus Cadila) நிறுவனம் டி.என்.ஏ. தடுப்பூசியை தயாரிக்கும். இதன் 3-வது கட்ட பரிசோதனையும் நடந்து வருகிறது. இது ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவலகள் வெளியாகி உள்ளன. இது கோவேக்சினுக்கு பிறகு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 2-வது தடுப்பூசி என்ற பெயரைப் பெறும்.
7. பயாலஜிக்கல் இ Biological E தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் தயாரித்து வழங்கும். ஆகஸ்டு மாதம் இது பயன்பாட்டுக்கு வரும். இதன் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது
8. புனேயில் உள்ள ஜெனோவா (Gennova) நிறுவனம் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை தயாரித்து அளிக்கும். ஆனால், இதன் பரிசோதனை இனிமேல் தான் தொடங்க வேண்டும்.
மேற்கண்ட 8 தடுப்பூசிகளுடன் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய 3 தடுப்பூசிகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனவே திட்டமிட்டுள்ளபடி இந்த தடுப்பூசிகள் கிடைத்து விட்டால், நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, மந்தை எதிர்ப்புச்சக்தியைப் பெறும் நிலை நிச்சயம் உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அது கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியாக அமையும்.
ALSO READ | 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர் : தமிழக அரசு அறிவிப்பு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR