New budget 2024 in Tamil: 18ஆவது மக்களவை தேர்தலில் வென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வான நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வானார்.
இந்நிலையில், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்த பின்னர் முதல்முறையாக மத்திய நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை, காகிதமில்லா பட்ஜெட்டாக தற்போது தாக்கல் செய்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இருந்த நிலையில், இப்போது கூட்டணி கட்சிகளின் உதவியோடே ஆட்சி அமைத்திருக்கிறது. அந்த வகையில், கூட்டணி கட்சியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி ஆளும் ஆந்திரா மாநிலத்திற்கும், ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் மாநிலத்திற்கும் சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டு, நிதியும் ஏராளமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. ஒருமணிநேரத்திற்கும் மேலாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார்.