தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 234 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்!!
தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்வு.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் மட்டும் 46 பேர். இன்றைய பாதிப்பில் 304 ஆண்களும், 232 பெண்களும் உள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 234 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 4,406 ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் விகிதம் 37.46 ஆக உள்ளது. இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது உயிரிழப்பு விகிதம் 0.68 ஆக உள்ளது.
தற்போது 7,270 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் பதற்றமடையவோ பயமடையவோ வேண்டாம்; கொரோனாவை எதிர்கொள்வதே முக்கியம். இந்தியாவிலேயே குறைந்த அளவிலான இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் உள்ளது. கொரோனா பரிசோதனைகளை குறைக்கவில்லை. ஸ்டாலினின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. இதுவரை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 3,22,508 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி யாரும் விடுபடாமல் சோதனை செய்யப்படுகிறது. சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.