சென்னையில் இன்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது...
தமிழகத்தில் இன்று மேலும் 765 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்வு.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.... மாநிலத்தில் இன்று புதிதாக 765 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 16,277 ஆக அதிகரித்துள்ளது. இதில் மஹா.,வில் - 39 பேர், மேற்குவங்கத்தில் - 2 பேர், டில்லி, கேரளா, கர்நாடகா, பிலிப்பைன்ஸ், துபாய், லண்டனில் இருந்து வந்த தலா ஒருவரும் அடங்கும். இன்று சென்னையில் 6 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா ஒருவரும் என 8 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சோதனை செய்யபட்டவர்களிள் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 587 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 10,576 ஆக அதிகரித்துள்ளது. இன்று செங்கல்பட்டில் 46 பேரும், திருவள்ளூரில் 34 பேரும், காஞ்சிபுரத்தில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் அதிகபட்ச பாதிப்பாக கள்ளக்குறிச்சியில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 833 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 7,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 68 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 12,275 மாதிரிகள் சோதனையிடபட்டுள்ளன. மொத்த கொரோனா தொற்று பாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,003 பேரும், 13 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் 13,916 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1,358 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.