குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்த சில மணி நேரங்களில், வாடிக்கையாளர் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது SBI!
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 0.35% குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான SBI, கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளது.
முன்னதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 0.35% குறைக்கப்பட்டுள்ளது. 5.40 சதவீதமாக ரெப்போ விகிதம் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே ரிவரஸ் ரெப்போ விகிதம் 5.14 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வர்த்தக வங்கிகளும் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பல்வேறு கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 8.40%-ல் இருந்து 8.25%-மாக குறைத்துள்ளது. இந்த அறிவிப்பு ஆனது ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் SBI அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக SBI வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால் அதன் பயனை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்புகிறோம். இதனால் உடனடியாக 15 பைசா என்ற அளவில் அடிப்படை வட்டி விகிதம் குறைக்கப்படுகிறது’’ என குறிப்பிட்டுள்ளது.