மார்கழி மாதம் மிகவும் சிறப்பான மாதம். மார்கழி மாதத்தில் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் திருவாதிரை. எனவே திருவாதிரை நட்சத்திரமான இன்று, சிவாலயங்களில் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை மிகவும் சிறப்பாக நடைபெறும்.
திருவாதிரை விரதம் என்பது தீர்க்க சுமங்கலி வரமளிக்கும் விரதம் என்றும், திருவாதிரையில் சிவபெருமானை (Lord Shiva) வழிபட்டால், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிலவ ஆண்டு மார்கழி ஐந்தாம் நாள் இன்றைய பாசுரம்
திருவெம்பாவை பாடல் - 5
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
Also Read | மார்கழி 4 ஆம் நாள்: ஆழி மழைக்கண்ணனை போற்றுவோம்
பொருள்: யார் பெரியவர் என்று திருமாலுக்கும், பிரம்மனுக்கும் கருத்து வேறுபாடு வந்ததால், சிவனிடம் சென்று கேட்டால் உண்மை தெரியும் என்று ஈசனிடம் வேண்டுகின்றனர். கருத்து வேறுபாட்டைக் களைய, சிவபெருமான், சோதி வடிவில் தோன்றினார். நெருப்பின் அடி முடியை அறிய முடியாத விஷ்ணு உண்மையை ஒப்புக்கொண்டார். விண்ணையத் தாண்டிச் சென்றும் முடியைக் காண இயலாத பிரம்மா, எம்பெருமானின் சடாமுடியில் இருந்த கீழே விழுந்த தாழம்பூவைப் பார்த்து, முடியைக் கண்டதாக சொல்லி, பூவையே சாட்சியாக்கினார்.
முடியைக் கண்டதாக பிரம்மா பெய் கூறியதால் பிரம்மாவை சபித்த சிவன், பொய்யுரைத்த தாழம்பூவை தனது வழிபாட்டில் இருந்து ஒதுக்கிவிட்டார். உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய சோதி வடிவான வடிவான பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன் "சிவசிவ" என்று ஓலமிட்டு அனைவரும் அழைக்கிறோம். இதை உணராமல் உறக்கத்தில் இருக்கும் தோழியே, எழுந்து வா என்று கன்னிப் பெண்கள் துயிலெழுப்புகிறார்கள்.
திருப்பாவை பாடல் - 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!!
Read Also | மார்கழி 3 ஆம் நாள்: அரியும் அரனும் ஒன்றாய் அருள் பாலிக்கும் மார்கழி மாதம்!!
பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்யும் கண்ணன் மதுரா நகரில் அவதரித்தவர். ஆயர்குலத்தில் பிறந்த அழகிய ஒளி பொருந்திய கிருஷ்ணன் (Lord Krishna), யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவன். அன்னை தேவகியின் வயிற்றுக்கு பெருமை அளித்தவன். கண்ணனின் குறும்பை அடக்க, யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தி கிருஷ்ணனின் இடுப்பில் தழும்பு ஏற்பட்டது.
தாமோதரன் என்ற பெயர் பெற்ற கண்ணனின் திருவடிகளில் தூய்மையான உள்ளத்துடன் வனங்கி, அவனது நற்குணங்களைப் போற்றிப் பாடினால், அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்கல் நெருப்பில் இட்ட தூசு போல தடயமின்றி அழிந்து போய் விடும்! பாவச்சுவடழிய, மாயனின் திருநாமங்களை சொல்லி, பாவை நோன்பிருப்போம், வாருங்கள் ! என்று அன்புடன் கோதை நாச்சியார் அழைக்கிறாள்.
Also Read | கோபிகைகளின் பானையை கண்ணன் ஏன் உடைத்தார்? உறியடியின் பின்னணி ரகசியம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR