பிரபல இயக்குநர் சித்திக் காலமானார்... சோகத்தில் திரையுலகம்!

Director Siddique Passed Away: பிரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சித்திக் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றிரவு காலமானார்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 8, 2023, 11:56 PM IST
  • அவருக்கு வயது 63.
  • நேற்று மாலை 3 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
  • அவர் ஏற்கெனவே கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
பிரபல இயக்குநர் சித்திக் காலமானார்... சோகத்தில் திரையுலகம்! title=

Director Siddique Passed Away: பல்வேறு மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சித்திக் உடல்நலக்குறைவால் காலமானார். மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்றிரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு அங்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட சித்திக் கடந்த ஜூலை 10ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வயது 63.

அவர் உயிரிழந்த செய்தியை மலையாள  இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் நடிகர் லால் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கல்லீரல் நோய் மற்றும் நிமோனியா காரணமாக சித்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன. 

அதில், நேற்று மாலை 3 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவ குழு கூடி சித்திக்கின் உடல்நிலையை ஆய்வு செய்தது. பின்னர் உடல்நிலை குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு அளிக்கப்பட்டு வந்த எக்மோ வாபஸ் பெறப்பட்டது. 

24 மணிநேர எக்மோ சிகிச்சை...

இயக்குநர் சித்திக் கல்லீரல் நோயால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். நோயின் தாக்கம் சற்று குறைந்து வந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சித்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் நோயுடன், நிமோனியாவும் உடல்நிலையை பாதித்தது. இதனுடன், மாரடைப்பும் உடல்நிலையை சிக்கலாக்கியுள்ளது. 24 மணிநேர எக்மோ சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, இன்றிரவு அவரின் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது. 

மேலும் படிக்க | பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணம்! வருந்தும் ரசிகர்கள்!

நாளை மாலை நல்லடக்கம்

நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கொச்சி ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மாலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

திரைவாழ்வு

கொச்சி கலா பவனில் மிமிக்ரி கலைஞராக  சித்திக் தனது கலை வாழ்க்கையை தொடங்கினார். அந்த சமயத்தில்தான் இயக்குநர் ஃபாசிலின் நட்பு அவருக்கு கிடைத்துள்ளது. அதன்மூலம், அவர் திரைத்துறையில் கால் பதித்தார். பின்னர், ஃபாசிலிடம் உதவியாளராகப் பணியாற்றிக் கிடைத்த அனுபவத்தின் மூலம், திரைப்பட இயக்கத்திலும் தீவிரம் காட்டினார். கதை மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் மலையாளத்தில் கொடிக்கட்டி பறந்துள்ளார். 

1989ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி', 'ஹிட்லர்' உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களை இயக்கினார். தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான 'ஃப்ரெண்ட்ஸ்'; விஜய்காந்த், பிரபுதேவா நடித்த 'எங்கள் அண்ணா',  மற்றும் விஜய், அசின் நடிப்பில் வெளியான 'காவலன்' ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தமிழில் கடைசியாக அரவிந்த் சாமியை வைத்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் (2018) படத்தையும், மலையாளத்தில் மோகன்லாலை வைத்து 'பிக் பிரதர்' (2020) படத்தையும் இயக்கினார். மலையாளம், தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் இவர் 'பாடிகாட்' படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அங்காடி தெரு சிந்துவின் உயிரை பறித்த மார்பக புற்றுநோய்... வராமல் தடுப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News