புதுடெல்லி: ஆன்லைனில் மளிகை பொருட்களை விற்பனை செய்யும் பிக் பாஸ்கெட்டின் (BigBasket) தரவுகள் திருடப்பட்டுள்ளன. ஹேக்கர்கள் இரண்டு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் விவரங்களை ஹேக் செய்துவிட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, பெங்களூரு காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது. நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும், இந்த ஹேக்கிங் சிக்கல், எதிர்காலத்திலும் வாடிக்கையாளர்களை பாதிக்கும். BigBasketஇல் இனிமேல் ஷாப்பிங் செய்வதாக இருந்தால், உங்கள் முக்கியமான விவரங்களை மாற்றிக் கொள்ளுங்கள், இல்லையென்றால் எதிர்காலத்தில் ஏதேனும் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
Cyble கொடுத்த அதிர்ச்சித் தகவல்
சைபர் புலனாய்வு நிறுவனமான சைபிள் (Cyble) இந்த ஹேக்கிங் குறித்து ஒரு அறிக்கையை அளித்துள்ளது, இதன் அடிப்படையில் சைபர் கிரைம் செல்லில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான வலைதள கண்காணிப்பைச் மேற்கொள்ளும்போது, சைபர் கிரைம் சந்தையில் BigBasketஇன் தரவுத்தளம் விற்பனைக்குக் கிடைப்பதாக ஆராய்ச்சி குழு கண்டறிந்தது. இந்த திடுக்கிடும் தகவலை BigBasket நிறுவனம் தெரிவித்துள்ளது. BigBasketஇன் தரவுகளின் மதிப்பு என்ன தெரியுமா? 15 ஜிபி SQL கொண்ட தரவுகளின் கோப்புகளின் விலை 30 லட்சம் ரூபாய் (40 ஆயிரம் டாலர்கள்).
திருடப்பட்ட தரவுகளில் உள்ள தகவல்கள் என்ன?
திருடப்பட்ட தரவுகளில் பயனரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல், தொலைபேசி எண், முகவரி, பிறந்த தேதி, இருப்பிடம் மற்றும் ஐபி முகவரி (IP address) ஆகியவை உள்ளன. நிறுவனம் கடவுச்சொல்லை OTP மூலம் ஒவ்வொரு முறையும் அனுப்புகிறது, எனவே கடவுச் சொல் மாறிக் கொண்டே இருக்கும் என்பது ஒரு சிறிய ஆறுதல் தரும் செய்தி.
வாடிக்கையாளர் தனியுரிமைக்கு முன்னுரிமை
வாடிக்கையாளர் தனியுரிமையே தங்கள் முன்னுரிமை என்று BigBasket நிறுவனம் தெரிவித்துள்ளது. கிரெடிட் கார்டு எண்கள் உள்ளிட்ட எந்த நிதி தரவையும், தங்கள் தரவுத்தளம் சேமிக்காது என்றும், எனவே நிதி தரவுகள் பாதுகாப்பாகவே இருக்கும் என்று நம்புவதாகவும் பிக்பாஸ்கெட் கூறியுள்ளது. மேலும், தங்களிடம் ஒரு சிறந்த தகவல் பாதுகாப்பு கட்டமைப்பு இருப்பதாகவும், அது சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது என்றும் BigBasket நிறுவனம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. தங்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த உயர்தரமான தரவு பாதுகாப்பை உறுதிப்படுத்த, தகவல் பாதுகாப்பு நிபுணர்களுடன் தொடர்ந்து முயல்வதாக BigBasket நிறுவனம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தரவு ஹேக் நடந்ததாக Cyble கூறுகிறது.
Read Also | AirPods Proவில் ஒலி சிக்கல்களுக்கு தீர்வு காணுமா Apple?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR