டி20 தொடரை அடுத்து ஒருநாள் தொடரையும் வென்று அசத்திய இந்திய அணி

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டி தொடரையும் வென்று அசத்தியுள்ளது.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Aug 15, 2019, 10:43 AM IST
டி20 தொடரை அடுத்து ஒருநாள் தொடரையும் வென்று அசத்திய இந்திய அணி
Pic Courtesy : @bcci

டிரினிடாட்: விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், ஒருநாள் போட்டி தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

முன்னதாக முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி  59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தபோட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்தநிலையில், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி 22 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டும் ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். மழை காரணமாக, 

டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 255 ரன்கள் என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் வீரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் ரிஷாப் பன்ட் அவுட் ஆக, மறுமுனையில் இந்திய கேப்டன் விராட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரும் இணைந்து அதிரடியாக விளையாடி அணியை வெற்றியின் பாதையில் அழைத்து சென்றனர். நன்றாக ஆடி வந்த கேப்டன் விராத் கோலி 94 பந்துகளில் சதம் அடித்தார். இது அவருக்கு 43-வது சதமாகும். 

கடைசியாக 32.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. விராத் 114 ரன்களுடனும், கேதார் ஜாதவ் 19 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது கேப்டன் விராத் கோலிக்கு வழங்கப்பட்டது.